மக்கள் நலன் மீது ஓபிஎஸ்க்கு அக்கறை இல்லை... -ஜி.ராமகிருஷ்ணன்
எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அமைச்சர்கள் கூடி 'கட்சிப் பதவிகளுக்கு தினகரன் செய்த நியமனங்கள் செல்லாது' என்று நிறைவேற்றிய தீர்மானம், அதைத் தொடர்ந்து 'நான் நடவடிக்கை எடுத்தால் ஆட்சி களையும்' என்ற தினகரனின் செய்தியாளர் சந்திப்பு, 'சசிகலா குடும்பத்தை நீக்கினால் தான் இணைப்பு சாத்தியம்' என்ற ஓபிஎஸ் அணியின் முடிவு... இப்படி அதிமுகவில் நடக்கும் அமளிகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனிடம் கேட்டோம்...
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியிலும், ஆட்சியிலும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான கடும் போட்டி நடந்துகொண்டிருக்கிறது. இந்தப் போட்டியில் இது ஒரு முக்கியமான கட்டம். சசிகலா தலைமையில் ஒரு அணி, பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணி என இரண்டானது. அதன் பிறகு சசிகலாவின் ஆதரவோடு முதல் அமைச்சர் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி ஒரு அணி உருவானது. சசிகலா சிறை சென்ற பிறகு தினகரன் அணியாக செயல்படுகிறது. மூன்று அணிகளாக செயல்படுகிறார்கள்.
கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும், ஆட்சியின் கைப்பற்றுவதற்கும், தக்க வைப்பதற்கும் கடும் போட்டி நிலவுகிறது. இதுதான் நடக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் கடுமையான சோதனைகளை சந்தித்துக்கொண்டிருக்கிற இந்த சூழலில் ஒரு கேவலமான ஒரு நிலைமை ஆளும் கட்சிக்குள் நிலவுகிறது. அதிகாரத்தில் இருந்தால்தான் கொள்ளையடிக்க முடியும், அதிகாரம் இல்லையென்றால் கொள்ளையடிக்க முடியாது என்பதால் அதனை தக்க வைக்க நினைக்கிறார்கள்.
சசிகலா சிறைக்கு சென்ற பிறகு கட்சி தலைமையை கைப்பற்ற ஓ.பி.எஸ். முயற்சித்து அது இயலாதபோது, மக்களுக்காக போராட்டம் அறிவித்தார். உண்மையிலேயே மக்கள் நலன் மீது ஓ.பி.எஸ்.க்கு அக்கறை இருக்கிறது என்றால், தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்து எதுவும் சொல்லவில்லையே. அடுத்தடுத்து தமிழக மக்களை நசுக்கி வருகிறது மத்திய அரசு. நீட், காவிரி மேலாண்மை வாரியம் போன்றவற்றை பற்றி எதுவும் வாய்திறக்கவில்லையே ஓ.பி.எஸ். பிளவுப்பட்டு கிடக்கும் அதிமுகவை பயன்படுத்தி தமிழகத்தில் காலூன்ற முயற்சிக்கிறது பாஜக.
-வே.ராஜவேல்