தமிழகத்தில் குழந்தைகளை கடத்துவதற்காக வட மாநிலங்களில் இருந்து கும்பல்கள் கிளம்பி உள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களை அடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே வடமாநிலத்தவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
சென்னை திருவண்ணாமலையின் செய்யாறு திண்டுக்கல் மாவட்டம் கொம்பேறிபட்டி, நாகை, கிருஷ்ணகிரி ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகள் கடத்த வந்ததாக வட மாநிலத்தவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. வதந்திகளை நம்ப வேண்டாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட போதிலும் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் ராமேஸ்வரத்திற்கு சுவாமி தரிசனத்திற்கு வந்திருந்த வடமாநில சாமியார்கள் கூகுள் மேப் மூலம் சேலத்துக்கு செல்ல முயன்ற நிலையில் அவர்கள் வழி தவறி கிராமம் ஒன்றில் புகுந்துள்ளனர். இதனால் குழந்தைகள் கடத்த வந்த நபர்கள் என தகவல்கள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து சேலத்திற்கு கூகுள் மேப் உதவியுடன் வடமாநில சாமியார்கள் பயணித்தபோது தவறுதலாக விராலிமலை-மணப்பாறை சாலையில் உள்ள மணமேட்டுப்பட்டி கிராமத்திற்குள் புகுந்துள்ளனர். கிராமத்துக்குள் வந்த அவர்கள் வழி தெரியாமல் அந்த வழியில் இருந்த சிறுவர்களிடம் வழி கேட்டுள்ளனர். இதனைப் பார்த்த அந்த கிராமப் மக்கள் கும்பலாக வந்துள்ள சாமியார்களை கண்டு அதிர்ந்து குழந்தைகளை கடத்த வந்தவர்கள் என நினைத்து அவர்களை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர்களை போலீசில் ஒப்படைத்தனர். வடமாநில சாமியார்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் ராமேஸ்வரம் சென்று விட்டு திரும்பி வந்தது தெரிய வந்தது. பின்னர் அவர்கள் பத்திரமாக சேலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.