நியாயவிலைக் கடை ஊழியரை நேர்காணல் மூலம் நியமிப்பது ஊழலுக்கே வழிவகுக்கும்! ராமதாஸ்
நியாயவிலைக்கடை பணியாளர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கும் திட்டத்தைக் கைவிட்டு, போட்டித்தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுத்து நியமிக்க தமிழக அரசு முன்வர வேண்டும். நியாயவிலைக் கடை ஊழியரை நேர்காணல் மூலம் நியமிப்பது ஊழலுக்கே வழிவகுக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களிலுள்ள நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையாளர்கள், கட்டுனர்கள் என 2976 பணியாளர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வெளியிட்டிருக்கிறது. சுமார் 3 ஆயிரம் பேருக்கு பொதுத்துறை நிறுவன வேலை கிடைப்பது மகிழ்ச்சியளிக்கும் போதிலும் அதற்கான ஆள்தேர்வு நியாயமாக நடக்குமா? என்ற ஐயம் எழுந்துள்ளது.
பொது வினியோகத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கூட்டுறவு சங்கங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் 25,532 முழு நேர நியாயவிலைக் கடைகள் 9154 பகுதிநேர நியாயவிலைக்கடைகள் என மொத்தம் 34,686 நியாயவிலைக் கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. சென்னை, வேலூர், பெரம்பலூர், தேனி, கரூர் ஆகிய மாவட்டங்கள் தவிர மீதமுள்ள 27 மாவட்டங்களில் 2976 விற்பனையாளர்கள், கட்டுனர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். மாநில அளவில் இல்லாமல் மாவட்ட அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, அதில் ஒவ்வொருவரும் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் கட்டுனர்களும், விற்பனையாளர்களும் நியமிக்கப்படுவார்கள் என்று நுகர்பொருள் வாணிபக் கழகம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு தான் பல வகையான ஐயங்களை ஏற்படுத்தியிருக்கிறது. வழக்கமாக நியாயவிலைக் கடைப்பணியாளர்கள் வேலைவாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்படுவர். இந்த முறையில் தான் முறைகேடுகளை தவிர்க்க முடியும். ஆனால், வேலைவாய்ப்பக பதிவின் அடிப்படையில் மட்டும் பணி நியமனங்களை மேற்கொள்ள முடியாது என்றும், ஆள்தேர்வு குறித்து பொது அறிவிப்பு வெளியிட்டு வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்யாதவர்களிடமிருந்தும் விண்ணப்பங்களைப் பெற்று தான் பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதால், அனைவருக்கும் பொதுவாக போட்டித் தேர்வு நடத்தப்பட்டு தான் பணியாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. விருப்பம் இல்லாவிட்டாலும் இந்த முறையைத் தான் ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கும் கூடுதலான கல்வித் தகுதி கொண்ட அனைத்துப் பணிகளுக்கும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வு நடத்தி, அதில் ஒவ்வொருவரும் எடுக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டும் தான் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளில் கூட முதல் தொகுதித் தேர்வுகள், இரண்டாம் தொகுதித் தேர்வுகளில் சில பணிகள் தவிர மற்றவற்றுக்கு நேர்காணல் நடத்தப்படுவதில்லை. காரணம்... நிர்வாகரீதியாக முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட சில பதவிகளைத் தவிர மற்றவற்றுக்கு நேர்காணல் தேவையில்லை என்பதும், நேர்காணலில் தான் வேண்டியவர்களுக்கு சாதகமாக பெருமளவில் முறைகேடுகள் நடத்தப்படுகின்றன என்பதும் தான்.
பத்தாம் வகுப்பு தகுதி கொண்ட பணிகளுக்கே போட்டித் தேர்வு மூலம் தான் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் எனும் போது, 12-ஆம் வகுப்புத் தகுதி கொண்ட விற்பனையாளர் பணிக்கும், பத்தாம் வகுப்பு தகுதி கொண்ட கட்டுனர் பணிக்கும் போட்டித்தேர்வு நடத்தாமல் நேர்காணல் நடத்துவது முறையல்ல. அதிலும் மாவட்ட அளவில் நேர்காணல் நடத்துவதால் மிகப்பெரிய அளவில் ஊழல் நடக்க வாய்ப்புள்ளது. ஆளுங்கட்சி ஆதரவாளர்களும், லட்சக்கணக்கில் பணம் கொடுத்தவர்களும் மட்டும் தேர்வு செய்யப்பட்டு, தகுதியும், திறமையும் உள்ளவர்கள் புறக்கணிக்கப்படும் ஆபத்துள்ளது. சத்துணவுப் பணியாளர் நியமனத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்த நிலையில், நியாயவிலைக்கடை ஊழியர்கள் நியமனத்திலும் பெரும் முறைகேடுகளும், ஊழலும் நடப்பதற்கான சாத்தியக்கூறுகளை மறுக்க முடியாது.
எனவே, நியாயவிலைக்கடை பணியாளர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கும் திட்டத்தைக் கைவிட்டு, போட்டித்தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுத்து நியமிக்க தமிழக அரசு முன்வர வேண்டும். அதுமட்டுமின்றி முறையே 12 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்புத் தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு ஓராண்டுக்கு தொகுப்பூதியமும், அடுத்த ஆண்டு முதல் முறையே ரூ.4,300, ரூ.3,900 அடிப்படை ஊதியம் வழங்குவதும் மிக மிகக் குறைவானதாகும். எனவே, விற்பனையாளர்களுக்கு 12-ஆம் வகுப்புத் தகுதி கொண்ட அரசு ஊழியர்களுக்கு இணையாகவும், கட்டுனர்களுக்கு பத்தாம் வகுப்பு தகுதி கொண்ட அரசு ஊழியர்களுக்கு இணையாகவும் அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியம் நிர்ணயிக்க ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.