முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் கவர்னரிடம் புகார் மனு கொடுத்ததின்பேரில் சபாநாயகர் தனபால் அந்த 18எம்.எல்.ஏ.களையும் பதவி நீக்கம் செய்தார் அதை எதிர்த்து டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் கோர்ட்டுக்கு போயும் கூட சபாநாயகர் பதவி நீக்கம் செய்தது சரிதான் என டிடிவி ஆதரவு எம்எல்ஏக்களுக்கு எதிராக கோர்ட் தீர்ப்பு கூறியதை கண்டு டிடிவியும் ஆதரவு எம்.எல்.ஏ.களும் அதிர்ச்சி அடைந்து விட்டனர் அதைத்தொடர்ந்து மேல்முறையீடு செய்ய இருந்த டிடிவி திடீரென தேர்தலை சந்திக்க தயார் என கூறியதுடன் மட்டுமல்லாமல் நடக்க இருக்கும் இடைத்தேர்தலில் இருபது தொகுதிளிலும் நாங்கதான் வெற்றி பெறுவோம் எனக்கூறி இருக்கிறார்.
இந்த நிலையில் ஆளும் ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆட்சியும் இடைத்தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. அதற்கான ஆலோசனை கூட்டத்தையும் ஈபிஎஸ் ஓபிஎஸ் நடத்தி இருக்கிறார்கள் திமுகவும் தேர்தலை சந்திக்க முன்கூட்டியே ஒவ்வொரு தொகுதிகளிலும் பூத் கமிட்டியே போட்டு வருகிறது. இப்படி அனைத்து எதிர்கட்சிகளும் இடைத்தேர்தலில் குதிக்க தயாராகி வருகிறது. இந்த நிலையில்தான் பதவிநீக்கம் செய்யப்பட்ட டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.கள் 18 பேரும் அந்தந்த தொகுதியில் களம் இறங்க தயாராகி வருகிறார்கள். அதற்கு டிடிவியும் பச்சைக்கொடி காட்டிவிட்டார்.
அதனடிப்படையில்தான் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை(தனி தொகுதி) தொகுதியில் பதவி நீக்கம் செய்யப்பட்ட தங்கதுரையே மீண்டும் அதிமுகவில் அல்ல, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் களம் இறங்க தயாராகி வருகிறார். அவருக்குதான் சீட் என்பது உறுதியாகிவிட்டது. இருந்தாலும் பதவியில் இருந்த காலங்களில் தொகுதி மக்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் பெரிதாக ஒன்றும் நிவர்த்தி செய்யவில்லை என்ற பேச்சு பொதுமக்கள் மத்தியில் பேசப்பட்டும் வருகிறது. அதுபோல் ஆளும்கட்சி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. தேன்மொழியும், அவரது கணவர் சேகரும் சீட்டுகேட்டு வருகிறார்கள் அதோடு மாவட்ட பிரதிநிதி பாலசுப்பிரமணியும் சீட் கேட்டு வருகிறார்.
ஆனால் தேன்மொழியும், சேகரும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆதரவாளர்களாக இருந்து வந்தனர், அப்படி இருந்தும் ஒபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கியபோது விச்சு மட்டுமே போனாரே தவிர தேன்மொழியும்.சேகரும் எடப்பாடி பக்கமே இருந்து விட்டனர் இருந்தாலும் விச்சு ஆதரவாளர்கள் என்ற பேச்சு இருந்து வருகிறது அதோடு தேன்மொழி எம்எல்ஏ இருந்த போது தொகுதி மக்களின் கோரிக்கைகளையும், குறைகளையும் பெரிதாக ஒன்றும் நிவர்த்தி செய்ய வில்லை கணவர் சேகர் தான் ஆக்டிங் எம்எல்ஏ வாக செயல்பட்டு வந்தார். என்ற குற்றச்சாட்டு தொகுதி மக்களிடம் பரவலாக எதிர் ஒலித்து வருகிறது. அதுபோல் நிலக்கோட்டை பேரூராட்சி தலைவராக சேகர் இருந்தும் கூட நகரம் ஒரு வளர்ச்சியும் அடையவில்லை என்ற பேச்சும் இருந்து வருகிறது. இந்த நிலையில்தான் சீனிவாசன் அமைச்சராக வந்தவுடனே சேகரும், தேன்மொழியும் சீனி ஆதரவாளர்களாக மாறிவிட்டனர். தற்பொழுது அதை வைத்துதான் இந்த இடைத்தேர்தலில் எனக்கு அல்லது என் மனைவி தேன்மொழிக்கு சீட் கொடுங்க என்ற கோரிக்கையை வனத்துறை அமைச்சர் சீனிவாசனிடமும், மாவட்ட செயலாளர் மருதராஜிடமும் முன் வைத்து வருகிறார்கள். இதில் சீனி ஆசியோடு தேன்மொழி அல்லது சேகருக்கு சீட் கிடைக்கும் என்ற பேச்சு கட்சிக்காரர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
அதுபோல் எதிர்கட்சியான திமுகவில் முன்னாள் எம்எல்ஏ முனியாண்டி மகனான வக்கீல் அன்பழகனுக்கு கடந்தமுறை கழக துணைப்பொதுச்செயலாளர் ஐ.பி. பரிந்துரையின்பேரில் சீட் கிடைத்து தங்கதுரையை எதிர்த்து போட்டி போட்டவர் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். அப்படி தோல்வியை தழுவிய அன்பழகன் மீண்டும் களத்தில் குதிக்க தயாராகி வருகிறார். இருந்தாலும் கட்சியில் ஆரம்ப காலத்திலிருந்து இருந்து வருபவரும் ஐ.பி.க்கு விசுவாசமாக இருந்து கொண்டு கட்சி கூட்டம். ஆர்ப்பாட்டம் போன்ற கட்சி பணிகளை முன்நின்று நடத்திவரும் கிழக்கு மாவட்ட துணை செயலாளர் நாகராஜூம் ஐ.பி.மூலம் சீட்டு கேட்டு வருகிறார். அதோடு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கரிகால் பாண்டியன் உள்பட சிலர் சீட்டுக்கு அடிபோட்டு வருகிறார்கள் இருந்தாலும் நாகராஜ் அல்லது அன்பழகன் இருவரில் ஒருவருக்குதான் கழக துணை பொதுச் செயலாளர் ஐ.பி.யும்.கிழக்கு மாவட்ட செயலாளரும்.பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.செந்தில்குமாரும் தலைவர் ஸ்டாலினிடம் பரிந்துரை செய்ய போகிறார்கள் என்ற பேச்சு உ.பி.கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டும் வருகிறது.
இந்த நிலையில் இந்த தொகுதியில் நான்கு முறை வெற்றி பெற்று எம்எல்ஏ வான காங்கிரஸ் கட்சி கட்சியின் மூத்ததலைவரான பொன்னம்மாள் பேத்தியான ஜான்சிராணி மாநில மகிளா காங்கிரஸ் தலைவராக இருக்கிறார். இவர் கடந்த முறை சீட்டு கேட்டு இருந்தார் ஆனால் கூட்டணி கட்சியான தி.மு.கவுக்கு ஒதுக்கியதால் சீட் கிடைக்கவில்லை. அதனால் இந்த தொகுதியை திமுக ஏதும் கூட்டணி கட்சியான காங்கிரஸ்க்கு ஒதுக்கினால் ஜான்சிராணியும் களத்தில் குதிக்க தயாராகி வருகிறார். இப்படி மற்ற அரசியல் கட்சிகளில் உள்ள பொறுப்பாளர்களும் இப்பவே சீட்டுக்கு அடிபோட்டு வருவதால் நிலக்கோட்டை தொகுதியும் இந்த இடைத்தேர்தல் மூலம் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது.