Skip to main content

மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் வீட்டில் என்ஐஏ போலீசார் திடீர் சோதனை! 

Published on 13/10/2021 | Edited on 13/10/2021

 

NIA police raid on salem Manivasakam relatives home

 

காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் தாயார், சகோதரி உள்ளிட்டோரின் வீடுகளில் தேசிய புலனாய்வுப்பிரிவு காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (அக்.12) திடீர் சோதனை நடத்தினர்.

 

சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அருகே உள்ள ராமமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் மணிவாசகம், மாவோயிஸ்ட். கடந்த 2019ஆம் ஆண்டு, தனது கூட்டாளிகளுடன் கேரள மாநிலம் அட்டப்பாடி வனப்பகுதியில் பதுங்கியிருந்தபோது காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

 

இதையடுத்து அவருடைய உடலை உறவினர்கள் சொந்த ஊருக்குக் கொண்டு வந்து, தகனம் செய்தனர். மாவோயிஸ்ட்கள் தொடர்பான வழக்கை, கொச்சியை தலைமையிடமாகக் கொண்டு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரித்துவருகிறது. இதற்கிடையே, மணிவாசகத்தின் மனைவி கலா, சகோதரி லட்சுமி ஆகியோர் வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். பத்து நாட்களுக்கு முன்பு அவர்கள் இருவரும் ஜாமினில் வெளியே வந்தனர். 

 

ad

 

அதேபோல் மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் உடல் தகனத்தின்போது அரசுக்கு எதிராகவும், பழிக்குப்பழி வாங்குவோம் எனவும் முழக்கமிட்ட வழக்கில் கைதான மைத்துனர் சாலிவாகனமும் ஜாமினில் விடுதலை ஆனார். மூவரும் ராமமூர்த்தி நகரில் தனித்தனி வீடுகளில் வசித்துவருகின்றனர். இந்நிலையில், கேரள மாநிலம் கொச்சியிலிருந்து என்.ஐ.ஏ. காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (அக். 12) அதிகாலை ராமமூர்த்தி நகருக்குத் திடீரென்று சென்றனர். அங்கு மணிவாசகத்தின் வீட்டிற்குச் சென்று விசாரித்தனர். கலா, லட்சுமி, சாலிவாகனம் ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர். 

 

அவர்களுடைய வீடுகளிலும் சோதனை நடந்தது. ஆயுதங்கள், ஆவணங்கள் ஏதேனும் உள்ளனவா என தீவிரமாக தேடிப்பார்த்தனர். அங்கிருந்து எதுவும் கைப்பற்றப்படவில்லை. என்.ஐ.ஏ. அதிகாரிகளின் திடீர் சோதனையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்