நெல்லை மாவட்டம் திருவேங்கடம் அருகே விருதுநகர் எல்லையில் உள்ள குகன்பாறை என்ற கிராமத்தில் உள்ளது குணா பட்டாசு ஆலை. இங்கு நடுவப்பட்டி, குலக்கட்டாகுறிச்சி, மைபாறை உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சுமார் 60 பேர் வேலை செய்கிறார்கள்.

வழக்கம் போலவே இன்று தொழிலாளர்கள் மதியம் 2 மணி அளவில் பட்டாசு கையாளூம்போது ஏற்பட்ட உரசல் காரணமாக தீப்பிடித்ததால் தயார் நிலையில் இருந்த பட்டாசுகள் வெடிது சிதறின. தொடர்ந்து அருகருகே உள்ள சிறிய தயாரிப்பு அறைகளிலும் பட்டாசுகள் வெடித்ததால் பட்டாசு ஆலை தரைமட்டமானது. இதில் சிக்கிக்கொண்ட 6 பேர் அடையாளம் தெரியாதவாறு உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். படுகாயமடைந்த 2 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.

வெம்பங்கோட்டை, சிவகாசி, கோவில்பட்டி, சங்கரன்கோவில் ஆகிய இடங்களில் இருந்து தீயணப்பு படையினர் தீயை அணைப்பதற்கு போராடிக்கொண்டிருக்கின்றனர். இடிபாடுகளிடையே சிக்கிய உடல்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் மீட்கப்பட்டு வருகின்றன. நெல்லை மாவட்ட எஸ்பி அருண்சக்திகுமார், திருவேங்கடம் காவல் நிலைய அதிகாரிகள் மீட்புபணியில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயருமோ என்று அஞ்சப்படுகிறது.
நெல்லை மாவட்ட ஐஜி மற்றும் ஆட்சியர் நேரில் வந்து ஆய்வு செய்து வருகின்றனர்.





