கடந்த 6 ஆம் தேதி சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் கொடுத்த அறிவிப்பின்படி இன்று 8/1/2022 நீட் விவகாரம் குறித்து விவாதிக்க தமிழக முதல்வர் தலைமையிலான அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்றது. சட்டமன்றத்தில் அங்கம் வகிக்கும் 13 கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்று கருத்துக்களை தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில் திமுக சார்பில் அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன், மா.சுப்பிரமணியன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பாஜக சார்பில் வானதி ஸ்ரீனிவாசன், காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை, பாமக சார்பில் ஜி.கே.மணி, தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வேல்முருகன் ஆகியோர் பங்கேற்ற நிலையில் பாஜக சார்பில் வந்திருந்த வானதி ஸ்ரீனிவாசன் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் இந்த கூட்டத்தில் நடைபெற்ற ஆலோசனையின்படி, 'நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டம் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டாட்சி தத்துவத்தை சீரழிக்கும் வகையில் உள்ள நீட் தேர்வு வசதி வாய்ப்புள்ளவர்களுக்கு சாதகமானது. நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் இன்னும் குடியரசு தலைவருக்கு அனுப்பாதது சட்டமன்றத்தின் மாண்பை சிதைக்கும் வகையில் உள்ளது. எனவே நீட் தேர்வுக்கு எதிராக சட்டப் போராட்டத்தை முன்னெடுப்பது' என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.