தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி எண்ணித் துணிக என்ற தலைப்பில் மாணவர்கள், குடிமைப் பணிக்கு தேர்வானவர்களுடன் அவ்வப்போது உரையாடல் நடத்தி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற நீட் இளநிலைத் தேர்வில் 720 க்கு 600 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள், ஆளுநருடன் முதல் முறையாக உரையாட சுமார் 100 பேர் சென்னை ஆளுநர் மாளிகையில் உள்ள பாரதியார் மண்டபத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட சேலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரின் தந்தை அம்மாசியப்பன் என்பவர் ஆளுநர் ஆர்.என். ரவியிடம் தமிழகத்தில் உள்ள மாணவர்கள் சார்பாக நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். எனவே நீட் தேர்வில் இருந்து எப்போது விலக்கு கொடுப்பீர்கள் என கேள்வி எழுப்பினார். அப்போது அங்கு இருந்தவர்கள் அவரை உட்காருங்கள் என அதட்டி அவரிடம் இருந்து மைக் பறிக்கப்பட்டது.
பெற்றோரின் கேள்விக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பதிலளிக்கையில் “நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது மாணவர்களின் போட்டி போடும் திறனைக் கேள்விக்குறியாக்கும். நீட் தேர்வுக்கு பயிற்சி மையங்களுக்கு சென்று படிக்க வேண்டும் என அவசியமில்லை. நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் தெரிவித்து ஒரு போதும் கையெழுத்திட மாட்டேன்” எனத் தெரிவித்தார். இதையடுத்து பெற்றோர்கள் ஆளுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் அம்மாசியப்பன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “கடந்த 6 ஆண்டுகளாக நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்கிறோம். இருப்பினும் இந்த நீட் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி அடைவதற்குத் திணறிக் கொண்டிருக்கின்றனர். 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை நீட் தேர்வுக்கு படித்தால் 20 லட்சம் செலவாகும் எப்படி எல்லோராலும் இவ்வளவு செலவிட முடியும். ஆளுநர் நீட் தேர்வை ரத்து செய்ய முடியவே முடியாது என்கிறார்.
பள்ளியில் பாடங்களைப் படிப்பதன் மூலம் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி அடைய வைக்க முடியவில்லை. நீட் தேர்வுக்குப் பின்னால் சதி உள்ளது. பயிற்சி மையங்களை வைத்து கொண்டு தான் நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயராகின்றனர். 6 வருடங்களாக தேர்விற்கான கேள்வி குறித்து திணறி வந்தனர். நீட் தேர்வினால் 15 குழந்தைகள் இறந்துள்ளனர். 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் 15 மணி நேரம் படித்ததாக சொல்கிறார். மாணவர்கள் இளம் வயதில் இவ்வளவு சிரமப்பட வேண்டுமா. கடந்த 70 ஆண்டுகளில் தமிழ்நாடு மிக சிறந்த மருத்துவ கட்டமைப்புடன் இருக்கிறது. இந்த சாதனைகள் எல்லாம் நீட் தேர்வு இல்லாமல் உருவானது தான். நாங்கள் அரசாங்கத்தை நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்.