Skip to main content

முருகனை சித்ரவதை செய்வதாக நளினி உண்ணாவிரதம்: முதல்வருக்கு மனு அளித்துள்ளதாக வக்கீல் பேட்டி!

Published on 27/10/2019 | Edited on 27/10/2019

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த 18ம் தேதி வேலூர் மத்திய சிறையில் சிறைத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் முருகன் அறையில் இருந்து ஆன்ட்ராய்ட் செல்போன், இரண்டு சிம்கார்டுகள், ஹெட்போன் போன்றவற்றை கைப்பற்றினர். இதுதொடர்பாக பாகாயம் காவல்நிலையத்தில் சிறைத்துறை சார்பில் புகார் தந்துள்ளனர். அதனை பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறைத்துறை விதிகளை மீறியதால் முருகனுக்கு வழங்கப்பட்டு இருந்த அனைத்து சலுகைகளையும் 3 மாதங்களுக்கு ரத்து செய்துள்ளதுடன், அவரை தனிச்சிறையிலும் அடைத்துள்ளனர்.

 

 Nalini fasting in jail

 

இந்நிலையில் 15 தினங்களுக்கு ஒருமுறை கணவன் - மனைவி இருவரும் நீதிமன்ற உத்தரவுப்படி சந்திப்பு நிகழும். செப்டம்பர் 26 ந்தேதி முருகன், நளினி சந்திப்பு நடந்திருக்க வேண்டும். கணவனை சந்திக்க நளினி தயாராகயிருந்தார். ஆனால் சிறை விதிகளை மீறியதால் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் சொன்னதும் நளினி அதிர்ச்சியடைந்தார்.

வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி நேற்று முன்தினம் சிறைத்துறை கண்காணிப்பாளருக்கு மனு அளித்தார். அதில், 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கபோவதாக கூறியிருந்தார்.

உண்ணாவிரதம் தொடங்கினால் கணவரை சந்திக்க முடியாது என்பதால் சந்தித்து விட்டு உண்ணாவிரதம் தொடங்க முடிவு செய்திருந்த நிலையில்தான் சந்திப்பு ரத்து என்கிற தகவல் கிடைத்துள்ளது. இதனால் நேற்று காலை கொடுக்கப்பட்ட பால் மற்றும் உணவை நளினி ஏற்க மறுத்து உண்ணாவிரதம்  தொடங்கியுள்ளார். அவரிடம் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அவரது வழக்கறிஞர் புகழேந்தி செப்டம்பர் 26 ந்தேதி வேலூர் சிறைகளில் உள்ள முருகன், நளினி இருவரையும் சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், முருகன் கடந்த 7 நாட்களாக சிறையில் கொடுக்கும் உணவை எடுத்து கொள்ளாமல், பழம், பால் மட்டும் சாப்பிட்டு வருகிறார். செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட பிறகு சிறை நிர்வாகம் முருகனை தனி சிறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாகவும், 4 நாட்களாக குளிக்கக்கூட நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை என்று சிறை கொடுமை குறித்து முருகன் வருத்தப்பட்டார்.

இதுப்பற்றி முதல்வருக்கு கோரிக்கை மனு எழுதி உள்ளார். சித்ரவதைக்கு ஆளாகியுள்ள தனது கணவர் முருகனின் உயிரை காப்பாற்ற வேண்டியே நளினி உண்ணாவிரதம் மேற்கொண்டு உள்ளார் என்றார்.

 

சார்ந்த செய்திகள்