கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மூரார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் இஸ்மாயில் ஷேக் மகன் சமீர் அகமது. இவர் மூரார்பாளையம் மற்றும் கள்ளக்குறிச்சி பகுதியில் சமீர் குரூப் ஆஃப் கம்பெனி என்ற பெயரில் இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி நிதி நிறுவனம் நடத்தி ஒரு லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூபாய் 12 ஆயிரம் வட்டி தருவதாக கவர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டார்.
இதை நம்பி மூரார்பாளையம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோடிக்கணக்கில் முதலீடு செய்தனர். ஆனால் அவர் கூறியபடி வட்டி தராமல் முதலீடு செய்த வாடிக்கையாளர் பணத்தைத் திருப்பி கேட்டு தொந்தரவு செய்ததால் அவர் திடீரென தலைமறைவானார். பின்னர் சென்னையில் இருந்த அவரை வாடிக்கையாளர் பிடித்து மூரார்பாளையம் அழைத்து வந்தனர். அப்போது வாடிக்கையாளர்கள், முகவர்கள் பணம் கேட்டு சமீர் அகமதை தாக்க முயன்றனர்.
இதை அறிந்த சங்கராபுரம் போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்ட போது கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் கிளை அலுவலகம் அமைத்து இரட்டிப்பு பணம், கூடுதல் வட்டி தருவதாகக் கூறி பல பேரிடம் கோடிக் கணக்கில் பணம் வசூல் செய்து மோசடி செய்தது தெரியவந்தது. இது குறித்து பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் மூரார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சிவராஜ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து சமீர் அகமதுவை கைது செய்தனர்.
இந்த வழக்கு விழுப்புரம் பொருளாதார குற்றப்பிரிவு மாற்றப்பட்டு விசாரணை செய்து வந்த நிலையில் இன்று பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் பாலா மற்றும் போலீசார் முன்னிலையில் மூரார்பாளையம் பரமநத்தம் ரோட்டில் உள்ள அவரது நகைக்கடைக்கும், நிதி நிறுவனம் மற்றும் கிளை அலுவலகம் ஆகிய மூன்றுக்கும் சீல் வைத்தனர்.