Skip to main content

'நீங்கள் முழுநேர அரசியல்வாதியா?'-கமல்ஹாசன் சொன்ன பதில்!  

Published on 27/12/2020 | Edited on 27/12/2020
kamalhasan in thiruchy

 

மக்கள் நீதி மய்யம் சார்பில் அதன் தலைவர் கமல்ஹாசன் திருச்சியில் உள்ள சிறுகுறு தொழில் முனைவோர்களோடு கலந்துரையாடலில் கலந்து கொண்டார். அதில் பேசிய கமல்ஹாசன்,

 

'நீங்கள் முழுநேர அரசியல்வாதியா?' என்ற கேள்விக்கு பெரியார் சொன்ன பதில் 'முழுமையாக யாரும் எதுவும் கிழிப்பதில்லை' என்பதுதான். அதுதான் என்னுடைய பதிலும். என்னோடு வந்து நீங்கள் அனைவரும் அரசியலில் குதிக்க வேண்டுமென்றும் அனைத்தையும் விட்டுவிட்டு என் பின்னால் வாருங்கள் என்பது மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை அல்ல. எதோ ஒரு வகையிலான மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பது மட்டுமே எங்களுடைய கொள்கை.

 

இதே அரசு கடந்த 8 வருடங்களுக்கு முன்பு என்னை துரத்திக் கொண்டு வந்து நடுத்தெருவில் நிறுத்துவதற்கு திட்டம் போட்டது. எனக்கு அன்று உதவியது இந்த திருச்சியில் இருந்த என்னுடைய வீடுதான். எனவே நீங்கள் தமிழகத்தை சீரமைக்க புறப்படுங்கள். நானும் புறப்படுகிறேன். அரசின்  செயல்பாடுகளையும், திருட்டுதனத்தையும் ஓடி ஒளிந்து மறைக்க முடியாது. அனைத்தும் வெளிச்சம் போட்டுக் காட்டப்படுகிறது.

 

kamal

 

தட்டுகிற கரங்கள் எல்லாம் முத்திரை வார்க்கும் கரங்களாக மாற வேண்டும். அதற்கான நினைவுறுத்தல் தான் எங்களுடைய பரப்புரை. தமிழகத்தை 1 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியை கொடுக்க வேண்டும் என்பதுதான் மக்கள் நீதி மய்யத்தின் இலக்கு. ஒவ்வொரு தொழிலும் 30 சதவீத வளர்ச்சி கொடுக்கப்படும். வருகிற ஜனவரி முதல் 'பேப்பர் லெஸ்' தலைமை அலுவலகமாக மக்கள் நீதி மய்யம் செயல்படும்.

 

தொழிலில் அதிக கவனம் செலுத்தும் மக்கள் நீதி மய்ய அரசு... அரசு , அரசு என்று பேசுவது நான் உங்களுடன் அமர்ந்து அரட்டை அடித்து விட்டு செல்ல வரவில்லை. நாங்கள் இதை செய்வோம் என்ற நம்பிக்கையில் கூறினேன். தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் டிரேட் சென்டர் அமைக்கப்படும். உலக தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படும். இதனால் நகரம் தூய்மையாக மாறும். நமக்கு எரி சக்தியும் கிடைக்கும்.

 

kamal

 

மக்கள் நீதி மய்யம் கைகளுக்குள் எப்படி இணைந்து இருக்கிறதோ அதேபோல் உங்களுடைய கைகளும் இணைந்திருக்க வேண்டும் என்றுதான் கேட்கிறோம். நான் உங்களிடம் ஓட்டு கேட்டு வரவில்லை. உங்களுடைய கைகளைக் கோர்த்துக் கொள்ளுங்கள் என்று கேட்கிறோம். நல்ல அரசை கொடுப்பதற்காக நாங்கள் இருக்கிறோம். நான் தருகிறேன்.

 

இந்த பரப்புரையில் இரண்டு நோய்கள் தாக்காமல் இருக்க கவனம் செலுத்தியுள்ளோம். இரண்டுமே கொள்ளை நோய்கள்தான். ஏனென்றால் இது ஒரு குருட்டு வியாதி. எல்லோருக்கும் வரும். அதிலும் இந்த அரசில் பிணைந்துள்ள ஊழல் என்ற நோய் நல்லவர்களை மட்டுமே தாக்கும். உங்கள் வாழ்க்கை, வியாபாரத் தரம் உயர்ந்து இருக்க ஒரே இடம் மக்கள் நீதி மய்யம்.

 

எதுகை மோனையுடன் பேசக்கூடிய கட்சியை சேர்ந்தவர்கள் அல்ல நாங்கள். அதி வேகமாக நடந்து செல்பவர்கள் நாங்கள் என்றார். மாற்றுத்திறனாளிகளுக்கான பல திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் இருப்பதாக மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர்  சாமிக்கண்ணு என்பவர் கொடுத்த மனுவை பெற்ற கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் ஒரு மாற்றுத்திறனாளி சட்டமன்ற உறுப்பினர் இருக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கொள்கை. உங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற உங்களைப் போன்றவர்கள் மக்கள் நீதி மய்யத்தில் இடம்பெறுவார்கள் என்று தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்