Skip to main content

2மணி நேரமாகியும் புறப்படாத அரசு பேருந்து... நேரில் வந்த அமைச்சரின் அதிரடி ஆக்‌ஷன்!

Published on 21/09/2021 | Edited on 21/09/2021

 

Minister who arrived at the scene at an unexpected time
                                                          மாதிரி படம்

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் அரசுப் போக்குவரத்து பணிமனை உள்ளது. இங்கிருந்து சென்னை, திருச்சி, கடலூர், விழுப்புரம் உட்பட பல்வேறு நகரங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் அரசு பஸ் சென்று வருகின்றன. இந்த நிலையில் தற்போது இப்பகுதியில் உள்ள கிராம விவசாய மானாவாரி நிலங்களில் தற்போது பருத்தி, மக்காச்சோளம், விதைத்து வளர்ந்து வருகின்றன. இந்தப் பயிர்களுக்குள் ஊடுருவி வளர்ந்துவரும் புல் செடிகளை களை எடுப்பதற்காக பல்வேறு கிராமப்புற ஊர்களில் இருந்து பெண்கள் திட்டக்குடி கடந்து 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று களை வெட்டி பிழைப்பு நடத்தி வருகிறார்கள். இவர்கள் தினசரி நீண்ட தூரம் சென்று களை எடுப்பதற்கு உதவியாக இருப்பது அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் தான்.

 

இந்த பேருந்துகளில் பெண்கள் செல்வதற்குத் தமிழக அரசு பெண்கள் இலவசமாகப் பயணம் செய்ய அனுமதித்துள்ளது. இந்த சலுகை உழைக்கும் கிராமப்புற பெண்களுக்கு மிகவும் பேருதவியாக உள்ளது. அப்படி வேலைக்குச் சென்று விட்டு தங்கள் ஊர்களுக்குத் திரும்பிச் செல்வதற்காகத் திட்டக்குடி பஸ் நிலையம் வந்து பஸ் ஏறி செல்கிறார்கள். இந்த நிலையில் நேற்று மாலை திட்டக்குடியில் இருந்து செவ்வேரி கிராமத்திற்குத் தினசரி மதியம் 12 மணி அளவில் செல்ல வேண்டிய அந்த பஸ் நீண்ட நேரமாகியும் புறப்படவில்லை. 40க்கும் மேற்பட்ட மகளிர் பொதுமக்கள் அந்த ஊர் வழியாக செல்வதற்கு  பஸ்ஸில் ஏறி அமர்ந்து காத்திருந்தனர். இரண்டு மணி நேரம் கடந்தும் அந்த பேருந்து புறப்படவில்லை. இதுகுறித்து காரணம் கேட்டபோது அந்த பஸ்சை இயக்குவதற்கான கண்டக்டர் வரவில்லை அதனால் பஸ்புறப்படவில்லை என்று தகவல் கூறியுள்ளனர்.

 

Minister who arrived at the scene at an unexpected time

 

இதனால் கோபம் அடைந்த பெண் பயணிகள் திட்டக்குடி பேருந்து நிலையம் முன்பு நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து திட்டக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னக்கிளி, சப் இன்ஸ்பெக்டர் சந்துரு, மற்றும் திட்டகுடி டி.எஸ்.பி சிவன் மற்றும் போலீஸார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சரும் தொகுதி எம்.எல்.ஏவுமான கணேசன் பொதுமக்கள் சாலை மறியல் செய்வதைக் கண்டு உடனே தனது காரை விட்டு இறங்கி பொதுமக்களிடம் சென்று குறைகளைகேட்டார். அப்போது பொதுமக்கள் கண்டக்டர் இல்லாததால் இரண்டு மணி நேரமாக பேருந்து செவ்வேரி கிராமத்திற்கு புறப்படவில்லை என்பதை தெரிவித்தனர்.

 

இதையடுத்து அமைச்சர் உடனடியாக திட்டக்குடி அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளர் குமரகுருவை வரவழைத்துப் பேசி வேறு கண்டக்டரை நியமித்து பஸ்சை கிராமத்திற்கு அனுப்பி வைத்தார். மேலும் சம்பந்தப்பட்ட கண்டக்டர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். இதனால் அங்குச் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்று அறிவிக்கப்பட்டது முதல் பல்வேறு நகரப் பேருந்துகளில் பெண்கள் கூட்டமாக செல்வதை அதில் பணி செய்யும் கண்டக்டர்கள், ஓட்டுனர்கள் விரும்புவதில்லை. பஸ் நிலையத்தில் நிற்கும் நகர பேருந்துகளில் பெண்கள் ஏறும்போது இந்த பேருந்து இப்போது செல்லாது, அந்தப் பேருந்தில் ஏறுங்கள் என்று கூறுவது வழக்கமாக உள்ளது. அந்த பேருந்தில் ஏறினால் இந்த பேருந்து இப்போது செல்லாது என்று அந்த நடத்துநர் இறக்கி விடுவதும் இப்படி பெண்களை அலைக்கழிக்க விடுகிறார்கள்.

 

வேறு வழியின்றி செல்லும் பேருந்துகள் பஸ் நிறுத்தங்களில் பெண்கள் நின்று பஸ்சில் ஏறுவதற்கு கையை நீட்டினால் பேருந்துகளை அங்கு நிறுத்துவதில்லை, இப்படி பெண்களை பல விதங்களிலும் அவமானப்படுத்துவதும் அவர்களை உதாசீனப் படுத்துவதும் எனஅரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனர்கள் பெரும்பான்மையினர் செய்து வருகிறார்கள். அரசு பஸ்சில் பெண்களுக்கு இலவச பயணம் என்று அறிவித்தும் கூட அதன் மூலம் பெண்களுக்கு அது பயனில்லாமல் போகிறது. எனவே அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் இதுபோன்ற பஸ்களை இயக்கும் ஓட்டுனர் நடத்துநர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். இதே நிலை தொடருமானால் பெண்கள் போராட்டத்தில் கூடும் நிலை ஏற்பட்டுள்ளது. தங்கள் வயிற்று பிழைப்புக்காக குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகக் கூலி வேலைக்குச் செல்வதற்காக, கடைகளுக்கும், தினசரி வேலைக்கு அன்றாடம் பஸ்ஸில் பயணம் செய்யும் பெண்கள்களின் நிலை தற்போது மிகவும் பரிதாபமாக உள்ளது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 


 

சார்ந்த செய்திகள்