சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி (20.06.2024) தொடங்கியது. அப்போது மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இரண்டாம் நாளில் (21.06.2024) இருந்து பல்வேறு துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலுரை வழங்கினார். அப்போது பேசுகையில், “ஆண்டுக்கு 10 லட்சம் என்ற அடிப்படையில், 31 லட்சம் வேலைவாய்ப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கியுள்ளார். விரைவில் 50வது சிப்காட் பூங்காவை முதலமைச்சர் தொடங்கி வைப்பார். தஞ்சையில் பாமாயில் உற்பத்தி தொழிற்சாலை விரைவில் தொடங்கப்பட உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை உருவாக்கப்படும். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் 60% உறுதி செய்யப்பட்டுள்ளன. அதாவது 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், 379 ஒப்பந்தங்களுக்கான பணிகள் நடந்து வருகின்றன. கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த 2 முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் பல லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக கூறினாலும், அவற்றில் சொற்பமானவை மட்டுமே பணிகளாக மாறின.
மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இந்தாண்டு ரூ. 2100 கோடி கடன் வழங்கப்படும். திருவண்ணாமலை மற்றும் கரூர் மாவட்டத்தில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும். மேலும் தனியார் பங்களிப்புடன் கூட்டு முயற்சியில் தொழிற்பூங்காக்களை சிப்காட் உருவாக்கும். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் புதிய விமான நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வெளியே இருக்கும் சிலர், இதில் கேள்விகளை எழுப்பியுள்ளனர். தீவிர ஆய்வுக்கு பிறகே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கண்டிப்பாக விமான நிலையம் அமையும். கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் வெகுவிரைவில் தொடங்கும். சேலம் விமான நிலைய விரிவாக்கப் பணிக்கு நிலம் எடுப்பு தொடங்கிவிட்டது. மேலும் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார்” எனத் தெரிவித்தார்.