அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கை, மாநிலத் தேர்தல் வரவிருக்கும் இக்கட்டான நிலையில், கோடை விடுமுறைக்கு முன்னர் எடுத்துக்கொள்வது பொருத்தமானதாக இருக்காது என சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்ததாக, அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகார் மீது, நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி, தி.மு.க. சார்பில் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் ஜெயராம் வெங்கடேசன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் 220 டெண்டர்களில் முறைகேடு நடந்துள்ளதாக, அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிராக எழுந்துள்ள புகாரில் முகாந்திரம் உள்ளதா என, ஆரம்பக்கட்ட விசாரணை நடந்து முடிவடைந்திருப்பதாகவும், அதில் அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என, முதலமைச்சர், அமைச்சரவை, தலைமைச் செயலாளருக்கு அறிக்கை அனுப்பியதாகவும், அதை அவர்கள் ஏற்றுக்கொண்டதாகவும், அதனால் இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்றும் தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு மனுதாரர் தரப்பில், ஆரம்பக்கட்ட விசாரணை முடிவடைந்தாலும், அமைச்சருக்கு நற்சான்று அளிக்கப்படவில்லை என்றும் இந்த வழக்கை நேரடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு எதிரப்பு தெரிவித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ‘மனுதாரரின் கோரிக்கையை ஏற்கக் கூடாது. முதற்கட்ட விசாரணையில் அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் இல்லை என லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை அளித்திருக்கிறது. அதனால், மனுதாரர்கள் லஞ்ச ஒழிப்புத்துறையின் அறிக்கையை எதிர்த்து, மாவட்ட நீதிமன்றத்தில்தான் வழக்குத் தொடர முடியும்’ என்று தெரிவித்தார்.
இதனையடுத்து, தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும், இக்கட்டான நிலையில், கோடை விடுமுறைக்கு முன்னர் இந்த வழக்கை எடுத்துக்கொள்வது பொருத்தமானதாக இருக்காது என்று ஜூன் மாதத்திற்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.