Skip to main content

முதல்வரின் உத்தரவையடுத்து வெலிங்டன் ஏரியைத் திறந்து வைத்த அமைச்சர்!

Published on 23/12/2021 | Edited on 23/12/2021

 

Minister opens Wellington Lake by order

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகிலுள்ளது கீழ்ச்செருவாய். இப்பகுதியில் உள்ளது வெலிங்டன் நீர்த்தேக்கம். வெள்ளாற்றிலிருந்து தொழுதூர் அருகே கட்டப்பட்டுள்ளது அணைக்கட்டு. இதன் மூலம்  தண்ணீர் திறந்து விடப்பட்டு வெலிங்டன் ஏரி நிரம்பும். சமீபத்தில் பெய்த மழையில் வெலிங்டன் ஏரி இருபத்தி எட்டு அடி முழு அளவு நீர் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டது. இந்த ஏரியின் மூலம் சுமார் 65க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் அவர்களுக்கு சொந்தமான 24 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இதில் இருந்து பாசனத்திற்குத் தண்ணீர் திறந்து விடுவதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்தது.

 

இதையடுத்து (23.12.2021) இன்று காலை பத்தரை மணி அளவில் கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் முன்னிலையில் திட்டக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான சி.வி. கணேசன் பாசனத்திற்கு ஏரியில் இருந்து தண்ணீரை திறந்து விட்டார். அப்போது அவர் பேசும்போது, எமது தொகுதியில் உள்ள 65 க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் இதன் மூலம் விவசாயம் செய்து பயன் பெறுவார்கள். தினசரி 200 கன அடி வீதம் சுமார் 120 நாட்களுக்கு அனைத்துப் பகுதிகளுக்கும் பாசனம் பெறும் வகையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் இந்த ஏரியை தூர்வாரி கரை செப்பனிடுவதற்கு உரிய உத்தரவை பிறப்பிக்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

 

Minister opens Wellington Lake by order

 

இந்த ஏரிக்கு நிரந்தர தண்ணீர் வரத்து ஏற்படுத்தும் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாஸ்கரன், கீழ்ச் செருவாய் பகுதி இளநிலை பொறியாளர் சோழராஜன் மற்றும் நீர்த்தேக்க பாசன பகுதியை சேர்ந்த விவசாய சங்க பிரமுகர்கள், திமுக பிரமுகர்கள், விவசாயிகள் உட்பட பெரும் திரளானவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்து வெலிங்டன் ஏரி பாசன பிரிவு அலுவலகத்தில் ஆய்வில் ஈடுபட்டிருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் பலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அமைச்சர் அறிவிப்பில் அனைத்து பாசன பகுதிகளுக்கு 120 நாட்கள் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஒரு போக நெல் சாகுபடி செய்வதற்கான உத்தரவாதம் அளித்துள்ளார்.

 

ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அரசிடமிருந்து தண்ணீர் திறப்பதற்காக பெற்றுள்ள உத்தரவில் மேல்மட்ட கால்வாய் என்று கூறப்படும் பகுதிகளுக்கு 80 நாட்களுக்கு மட்டும் தண்ணீர் விடப்படும் கீழ் மட்ட கால்வாய் பகுதிகளுக்கு 120 நாட்களுக்கு தண்ணீர் விடப்படும் என்று பாகுபாட்டுடன் உத்தரவை பெற்றுள்ளனர். 80 நாட்களுக்கு மட்டும் விடப்படும் தண்ணீரை கொண்டு எந்த மாதிரி நெல்லை விளைவிக்க முடியும். குறைந்தபட்சம் நெல்லை நாற்று விட்டு நடவு செய்து அறுவடை செய்ய குறைந்தபட்சம் 110 முதல் 120 நாட்கள் வரை தண்ணீர் தேவை. அப்படி இருக்கும்போது 80 நாட்கள் மட்டும்  தண்ணீர் விட்டால் 15 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசனம் பெற வேண்டிய மேல்மட்ட கால்வாய் பகுதி விவசாயிகள் எந்த பயிரும் செய்ய முடியாது.

 

Minister opens Wellington Lake by order

 

ஏரி தண்ணீர் முழு கொள்ளளவை நிரம்பியுள்ள நிலையில் இப்படி பாகுபாட்டுடன் தண்ணீர் பாசனத்திற்கு திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது ஏன் என்று கேள்வி கேட்டு பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாஸ்கரன், உதவி செயற்பொறியாளர் சோழராஜன் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது செயலாளர் பாஸ்கரன் ஒரு மாதத்தில் அனைத்து பகுதிகளுக்கும் 120 நாட்கள் தண்ணீர் விடும் வகையில் மறு உத்தரவைப் பெற்று அதை நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்துள்ளார். செயற்பொறியாளர் கூறியபடி 120 நாட்களுக்கும் மேல் மட்ட கால்வாய் பகுதிகளுக்கு முழுமையான அளவில் தண்ணீர் விடவில்லை என்றால் கடுமையான போராட்டத்தில் குதிக்கப் போவதாக விவசாயிகள் தெரிவித்து விட்டு கலைந்து சென்றனர். அமைச்சர் தண்ணீர் திறந்து விட்டு சென்ற பிறகு பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 


 

சார்ந்த செய்திகள்