உயர்நீதிமன்ற ஆணைய மீறி, உரிய அனுமதியின்றி சவடு மண் அள்ளிய இரு டிப்பர் லாரிகளை மணலுடன் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் கனிமவள துறையினர் ஒப்படைத்த நிலையில், இன்று வரை வழக்குப் பதிவு செய்யாமல் அலைக்கழித்து வருகின்றது உள்ளூர் காவல்துறை. இதனால் கனிமவளத்துறை வட்டாரத்தில் காவல்துறைக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை காவல்துறை துணைச்சரகத்திற்குட்பட்டது உப்பூர் அனல் மின் நிலையம். 2016- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சூப்பர் கிரிட்டிக்கல் தொழில் நுட்பத்துடன், ரூ.12,200 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 1,600 மெகா வாட் மின் உற்பத்திக்காக தலா 800 மெகா வாட் அலகுகள் அமைக்கும் பணி தமிழக அரசால் துவக்கப்பட்டு தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது. இந்த அனல் மின் நிலையப் பணிகளை லார்சன் & டர்போ (L&T), பெல் (BHEL) மற்றும் ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயலாற்றி வந்தாலும், இவர்களின் பணிகளைக் கண்காணிப்பது தமிழ்நாடு மின்வாரியமே. அனல் மின் நிலையங்களுக்கு கடல் நீரைக் கொண்டு வந்து, பின் அதனின் கழிவுகளை மீண்டும் கடலில் கொட்ட அனல் மின் நிலையத்திலிருந்து 7.8 கி.மீ தூரத்திற்கு பாலம் அமைக்கும் பணிக்கான ஒப்பந்தத்தை எடுத்துள்ள லார்சன் & டர்போ நிறுவனம் தற்பொழுது 2 கி.மீ.தூரத்திற்கு மண்ணைக் கொட்டி பாதையை அமைத்து, பாலப் பாதையின் தொடர்ச்சிக்காக அருகிலுள்ள இடங்களில் அனுமதியின்றி அள்ளப்பட்ட சவடு மண்ணைப் பயன்படுத்தி வருவதாகக் குற்றச்சாட்டு உண்டு.
இந்நிலையில், லார்சன் & டர்போ நிறுவனத்திற்காக கடந்த 9- ஆம் தேதி தேதியன்று ரிலையன்ஸ் நிறுவனத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில், முனியசாமி கோவில் அருகில் உயர்நீதிமன்ற ஆணையை மீறி, உரிய அனுமதியின்றி இரண்டு டிப்பர் லாரிகளின் துணைக்கொண்டு சவடு மண்ணை அள்ளியது ஒரு டீம். இதுக்குறித்து அனுமதியின்றி மண்ணை அள்ளுகிறார்கள் எனத் தமிழ்நாடு மின்வாரியத்தினர் மூலமாக மாவட்ட கனிம வளத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட, சம்பவ இடத்திற்கு உடனே விரைந்து வந்த கனிமவளத்துறையின் உதவி இயக்குநர் சபீதா சவடு மண்ணுடன் இரண்டு லாரிகளையும் பறிமுதல் செய்து அருகிலுள்ள திருப்பாலைக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
ஆனால், இன்று வரை இதுக் குறித்து வழக்குப் பதிவு செய்யவில்லை காவல் நிலையத்தார். இதனால் கோபமடைந்த கனிம வளத்துறையினர் தங்களது மேலதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துவிட்டு அமைதிகாத்து வருகின்றனர். இதே வேளையில், "லார்சன் & டர்போ நிறுவனத்துடன் தமிழ்நாடு மின்சார வாரியத்திலுள்ள சில அதிகாரிகள் துணை போவதாலே மணல் திருட்டு நடைப்பெற்று வருகின்றது. இதற்காக அவர்களுக்குக் கிடைக்கும் தொகையோ பல லட்சங்களுக்கு மேல் இருக்கும். இந்த லஞ்சம் அனைத்துத் துறைகளுக்கும் செல்வதால் தான் இதனை ஏனோ கண்டுகொள்ளவில்லை." என்கின்றனர் அனல் மின் நிலையத்தில் பணியாற்றும் நேர்மையான அதிகாரிகள். காவல் நிலைய வட்டாரமோ, "திருவாடனை டி.எஸ்.பி. இன்னும் வழக்குப் போட அனுமதிக்கவில்லை. அவர் கூறினால் மட்டுமே வழக்குப் போடுவோம்." என்கின்றனர்.
இது குறித்து விரிவான விளக்கத்தைத் தர வேண்டியது மாவட்டக் காவல்துறையின் பணி. விளக்கம் தருவார்களா எனக் கடுமையான விமர்சனங்களுடன் கேள்வியெழுப்புகின்றனர் கனிமவளத்துறையினர். விளக்கம் கிடைக்க வேண்டுமென்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பு.