Skip to main content

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க துணிவின்றி அடுத்தடுத்து ஒத்திவைக்க துடிப்பது ஏன்? அன்புமணி

Published on 18/09/2017 | Edited on 18/09/2017

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க துணிவின்றி 
அடுத்தடுத்து ஒத்திவைக்க துடிப்பது ஏன்? அன்புமணி

உள்ளாட்சி தேர்தல் விவகாரம் தொடர்பாக பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை :

’’தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை நவம்பர் 17-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும்; அதற்கான அறிவிக்கையை இன்றைக்குள் வெளியிடப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருந்த நிலையில், தேர்தல் அட்டவணையை வெளியிட தமிழக தேர்தல் ஆணையம் தவறி விட்டது. ஆளுங்கட்சிக்கு  ஆதரவான தேர்தல் ஆனையத்தின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு அக்டோபர் 25-ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்ட நிலையில், அவற்றுக்கான தேர்தல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தேர்தல் அறிவிப்பில் பல்வேறு குறைகள் இருப்பதை சுட்டிக்காட்டி  தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து  செய்ததுடன், தொகுதி மறுவரையறை செய்து 2016-ஆம் ஆண்டு திசம்பர் மாதத்திற்குள் நடத்த வேண்டும் என்று ஆணையிட்டது. ஆனால், கெடு முடிந்து 9 மாதங்கள் முடிவடைந்து விட்டாலும் இன்று வரை தேர்தலை நடத்த தமிழக அரசும், மாநில தேர்தல் ஆணையமும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இதுகுறித்த வழக்கில் கடந்த 4-ஆம் தேதி தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கையை இன்றைக்குள் வெளியிட வேண்டும் என ஆணையிட்டிருந்தது. ஆனால், உயர்நீதிமன்றத் தீர்ப்பை சற்றும் மதிக்காத தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கையை வெளியிடவில்லை. மாறாக, தொகுதி மறுவரையறை செய்து அதனடிப்படையில் மட்டுமே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் தீர்ப்பு வெளிவந்த பின்னர் தேர்தலை நடத்தப் போவதாகவும், அதுவரை தேர்தலை நடத்தாமல் இருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் மனுத் தாக்கல் செய்திருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைப்பதற்காக தேர்தல் ஆணையம் கூறியுள்ள காரணம் ஏற்கத்தக்கதல்ல. இது ஏமாற்றுவேலை.

உள்ளாட்சித் தொகுதிகளை மறுவரையறை செய்து அதனடிப்படையில் தேர்தலை நடத்த வேண்டும்  என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தொகுதி மறுவரையறை செய்ய இயலாது என்பது தான் தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு ஆகும். உயர்நீதிமன்றம் கடந்த 4&ஆம் தேதி அளித்த தீர்ப்பில் தொகுதி மறுவரையறை செய்து தான் தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிடவில்லை. தொகுதி மறுவரையறை செய்து தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்திய திமுகவும் இப்போது அக்கோரிக்கையை கைவிட்டு விட்டது. இது தேர்தல் ஆணையத்துக்கு ஆதரவான நிலைப்பாடு தான். இதைத் தான் தமிழக அரசும், தேர்தல் ஆணையமும் விரும்பின. ஆனால், கடந்த ஆண்டு இதேகாலத்தில் நிலவிய சூழல் தலைகீழாக மாறிவிட்டதால், தோல்விபயம் காரணமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிமுக அரசு தயங்குகிறது.

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்காக காத்திருப்பதாக மாநிலத் தேர்தல் ஆணையம் கூறுவது தேர்தலை தள்ளி வைப்பதற்கான தந்திரம் ஆகும். இரட்டை இலை சின்னம் இல்லாத நிலையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சம் காரணமாக இப்போதைக்கு தேர்தலை நடத்த வேண்டாம் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக தலைமை நெருக்கடி கொடுக்கிறது. அதன்காரணமாகவே  தேர்தல் ஆணையம் இல்லாத காரணங்களைக் கூறி தேர்தலை நடத்த மறுக்கிறது. கடந்த 15 மாதங்களாக தமிழகத்தில் நடக்கும் மிக மோசமான ஆட்சியால் ஆத்திரமடைந்திருக்கும்  தமிழக மக்கள், உள்ளாட்சித் தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைத்தால் கூட அ.தி.மு.க.வை படுதோல்வி அடையச் செய்யக் காத்திருக்கிறார்கள் என்பதை பினாமி ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால் கிராமங்களில் அடிப்படை வசதிகள் கூட செய்யப்படவில்லை. குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட தேவைகள் நிறைவேற்றப்படாததால் மக்கள் அவதிப்படுகின்றனர். மாநிலத் தேர்தல் ஆணையம் என்பது சட்டபூர்வ அமைப்பாகும். அந்த அமைப்பு தன்னிச்சையாக செயல்பட வேண்டுமே தவிர ஆட்சியாளர்களின் வாலாக செயல்படக்கூடாது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு உடனடியாக உயிரூட்ட வேண்டியிருப்பதால், உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி நவம்பர் 17&ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாக நடத்தி முடிக்க மாநிலத் தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும்.’’ 

சார்ந்த செய்திகள்