நெல்லையில் சாந்தி நகர் பகுதியில் டன் கணக்கில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவது அந்தப் பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
நெல்லை சாந்தி நகர் பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள இடம் ஒன்றில் டன் கணக்கில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான அந்த இடத்தில் எந்த ஒரு பாதுகாப்பு ஏற்பாடுகளும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏற்படுத்தப்படவில்லை. இந்நிலையில் இதனைப் பயன்படுத்தி மர்ம நபர்கள் சிலர் மருத்துவமனை கழிவுப் பொருட்களைக் கொட்டி வருகின்றனர்.
இதுபோன்ற மருத்துவப் பொருட்களை உரிய முறையில் அழிக்க வேண்டும் என்றால் நாங்குநேரியில் உள்ள மருந்துகள் அழிக்கும் மையத்தில் கொண்டுசென்று அழிக்கப்பட வேண்டும். ஆனால் அதற்கு மாறாக சட்டவிரோதமாக பழைய மருந்துகள், ஊசிகள், காலாவதியான மருந்துப் பொருட்கள் ஆகியவற்றை டன் கணக்கில் கொட்டியுள்ளனர். நகராட்சி சார்பில் அதை அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொண்டாலும் திரும்பத் திரும்ப அதே இடங்களில் மருத்துவக் கழிவுகள் டன் கணக்கில் கொட்டப்படுகிறது. மருந்துப் பொருட்களை அழிக்கும் மையத்திற்கு எடுத்துச் சென்றால் ஒரு கிலோ மருந்துப் பொருட்களை அழிப்பதற்கு 51 ரூபாய் கொடுக்க வேண்டும் என்ற நிலையில், சில தனியார் மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்படும் மருத்துவக் கழிவுகள் அப்படியே இந்த இடங்களில் கொட்டப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.