"மனைவி இருப்பதை மறைத்து, திருநங்கையான என்னை ஏமாற்றித் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்த எஸ்.ஐ. இப்பொழுது ஏனோ என்னைத் தவிர்க்கின்றார். அவர் என்னுடன் இருந்த காலங்களில் அவரிடம் நகை பணம் உள்ளிட்டவற்றை இழந்துள்ளேன். அதனையும், என்னுடைய வாழ்க்கையையும் மீட்டுத் தர வேண்டுகிறேன்" என்று ஒரு வில்லங்கப் புகாரை மாவட்ட எஸ்.பியிடம் அளிக்க, வில்லங்கத்திற்கு விடைத் தெரியாமல் தவிக்கின்றது காவல்துறை.
திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகேயுள்ள ராமச்சந்திராப் பட்டிணத்தை சேர்ந்தவர் திருநங்கையான பபிதா ரோஸ். இவரது ’ரோஸ்’ டிரஸ்ட் நிறுவனத்தின் மூலம் திருநங்கைகளுக்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்களையும், சேவைகளையும் செய்து வந்தவர். கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் திருநங்கைகளுக்கு எதிராக, "திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதும், காசு தர மறுக்கும் இடங்களில் அராஜகம் செய்வதும் கண்டிக்கத்தக்கது. எனவே, இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பேசியது சர்ச்சைக்குள்ளாக இவரது வீட்டிற்குப் போலீஸ் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தன்னை ஏமாற்றி திருமணம் செய்து நகை, பணத்தை அபகரித்துக் கொண்டதாக அம்பாசமுத்திரம் காவல்நிலைய எஸ்.ஐ. விஜய சண்முகநாதன் மீது மாவட்ட எஸ்.பி. அருண் சக்தி குமாரிடம் புகார் தெரிவிக்க, தற்பொழுது தாழையூத்து டி.எஸ்.பி.பொன்னரசு விசாரணை செய்து வருகின்றார்.
என்ன நடந்தது?
"திருநங்கை பபிதா ரோஸின் வீட்டில் யாரோ மர்ம நபர்கள் கல்வீசி தாக்குவதாக பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் செய்தோம். அப்பொழுது அங்கு எஸ்.ஐயாக இருந்தவர் விஜய சண்முகநாதன். இந்தப் புகார் சம்பந்தமாக அடிக்கடி பபிதா ரோஸை சந்திக்க, இருவருக்கும் பழக்கம் உண்டானது. நாளடைவில் இப்பழக்கம் இருவருக்கிடையே திருமணம் வரை சென்றது. மனைவி குழந்தைகள் இருப்பதை மறைத்தே திருநங்கை பபிதா ரோஸை திருமணம் செய்தார் எஸ்.ஐ. இரண்டு வருடத்திற்கு மேலாக உள்ள இவர்களது திருமண உறவு எஸ்.ஐ. குடும்பத்தாருக்குத் தெரிய வர, அவர்களும் கண்டித்துள்ளனர். இதனால் திருநங்கையுடான சந்திப்பை அறவே தவிர்த்து புறக்கணித்துள்ளார். இதனால் ஆத்திரப்பட்ட திருநங்கை தற்பொழுது எஸ்.பியை சந்தித்து புகாரளித்துள்ளார்" என்கின்றனர் விபரம் தெரிந்தவர்கள்.
செய்தியாளர்களிடம் பேசிய திருநங்கை பபிதா ரோஸ், "இது எங்களுக்குள்ளான குடும்பச் சண்டை. இரண்டு அல்லது மூன்று நாட்களில் நல்ல தீர்வை தருவதாக காவல்துறையினர் கூறியிருக்கின்றனர். அப்படி ஏதாவது தேவையெனில் பத்திரிகையாளர்களை அழைத்து நடந்ததை கூறுவேன்" என்றார் அவர். எஸ்.ஐ. விஜய சண்முகநாதனைத் தொடர்புக் கொண்டோம். பதிலில்லை.