மரக்காணம் அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்தது: 3 மீனவர்கள் உயிர் தப்பினர்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ளது எட்டியார்குப்பம். இந்த கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் வங்காளவிரிகுடா கடல்பகுதியில் மீன் பிடித்து வருகிறார்கள்.
நேற்று அதிகாலை அந்தபகுதியை சேர்ந்த மீனவர்கள் குமரேசன் (வயது24), அவரது தம்பி குணபால் (22), பாலமுருகன் (35) ஆகியோர் ஒரு பைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்கசென்றனர். அவர்கள் சிறிது தூரம் சென்றதும் கடலில் கொந்தளிப்பும், பயங்கர காற்றும் வீசியது. கடல் அலைகள் 15 அடிஉயரத்துக்குமேல் எழுந்தன. கடல் சீற்றம் அதிகம் காணப்பட்டதால் பைபர் படகை அவர்களால் இயக்க முடியவில்லை. சிறிது நேரத்தில் திடீரென்று படகு கடலில் மூழ்கியது.
அப்போது படகில் இருந்த மீனவர்கள் 3 பேரும் கடலில் விழுந்தனர். இதில் 3 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அவர்கள் நீந்திகரை திரும்பினர். அவர்கள் கடலில் படகு கவிழ்ந்தது குறித்து மற்ற மீனவர்களிடம் கூறினர். அதனை தொடந்து அவர்கள் படகுகளில் சென்று கடலில் மூழ்கிய படகையும், மீன் வலைகளையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.