Skip to main content

மனிதாபிமானமே உன் விலை என்ன?

Published on 09/08/2017 | Edited on 09/08/2017
மனிதாபிமானமே  உன் விலை என்ன?

நெல்லை மாவட்டம் வள்ளியூர் பக்கம் உள்ள துரைகுடியிருப்பைச் சேர்ந்தவர் முருகன். அடிமட்ட பால் கறவை தொழிலாளியான இவர் கடந்த 15 வருடங்களாக கேரளாவின் கொல்லம் நகரில் தங்கி பால் கறக்கும் தொழிலைச் செய்து வந்துள்ளார். கடந்த 6ம் தேதி இரவு தன் நண்பர் முத்துவுடன் ஹோட்டலில் இரவு சாப்பாட்டை முடித்து விட்டு அவருடன் பைக்கில் திரும்பி வந்த போது எதிரே வந்த இரு சக்கர வாகனத்தில் மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்ட போலீசார் அங்குள்ள கொட்டியத்திலிருக்கும் தனியார் மருத்துவ மனைக்கு அனுப்ப முத்துவுக்கு லேசான காயம் என்பதால் சிகிச்சை அளித்தனர். முருகன் படுகாயத்திலிருந்ததால் அதற்கான சிகிச்சை வசதியின்மை காரணத்தால் அரசு மருத்துவ மனைக்குக் கொண்டு போகச் சொல்லப்பட்து.

மாறாக ஆம்புலன்சில் அங்குள்ள தனியார் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்ல அங்கும் அவருக்கு சிகிச்சை அளிக்க வசதியில்லை என்று சொல்லி அனுப்பி விட்டனர். பிறகு கொல்லத்திலுள்ள வேறு ஒரு மருத்துவமனைக்குக் கொண்டு போன போது. உடனிருப்பதற்குரிய உறவினர்கள் இல்லாததால் சிகிச்சைக்கு மறுத்துள்ளனர். இப்படியாக மருத்துவமனை தோறும் அலைக்கழிக்கப்பட்ட முருகன், உயிர்க்குப் போராடிய நிலையில் அவரை திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரிக்குக் கொண்டு சென்ற போது அங்கே வென்டி லேட்டர் வசதியில்லை என்று கூறி டாக்டர்கள், சிகிச்சைக்காக அனுமதிக்க மறுத்து அனுப்பிவிட, கடைசியாக கொல்லத்திலுள்ள தனியார் மருத்துவ மனையைத் தொடர்பு கொண்டு நிலைமையைச் சொல்லியிருக்கிறார் ஆம்புலன்ஸ் பணியாளர் ராஜூ. பின்னர், அவர்கள் கொண்டு வரச் சொன்னதற்கு இணங்க மறுபடியும் கொல்லம் மருத்துவ மனைக்கு வந்த சேர்ந்த போது பொழுது விடிந்து காலை 7 மணியாகி விட்டது. பல மணி நேரம் ஆம்புலன்சில் அலைக்கழிக்கப்பட்டதாலும், அபரிமிதமான ரத்தப் போக்கினாலும், சிகிச்சைக்காக கொல்லம் வந்த போது முருகனின் உடலில் உயிர் இல்லை. பின்னர் கொல்லம் அரசு மருத்துவ மனையில் முருகனின் உடல் வைக்கப்பட்டது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்த சிகிச்சைக்காக மறுத்த அனைத்து மருத்துவமனைகளின் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட ஐ.ஜி.மனோஜ்ஆபிரகாமின் உத்தரவின்படி கொல்லம் கமிசனர் அஜிதாபேகம், கொல்லம் மெடிசிட்டி, மருத்துவக் கல்லூரி அசீசியா மருத்துவக் கல்லூரி, மெட்ரினா மருத்துவமனை கிம்ஸ் மற்றும் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனை என அனைத்து மருத்துவமனைகள் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டிருக்கிறார்.

இதனையடுத்து நேற்று முருகனின் உடல் கொல்லம் அரசு மருத்துவமனையில் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டு சொந்த ஊரான நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள துரைக்குடியிருப்பு கொண்டு வரப்பட்டது. உடலைப் பார்த்தும் அவரது மனைவி பாப்பா  பிள்ளைகள் கோகுல், ராகுல், உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் அவரது  உடல் அடக்கம் செய்யப்பட்டது.

மனித உயிரைக் காப்பாற்றும் கடவுளுக்கு ஒப்பான மருத்துவர்களே மனிதாபிமானமில்லாமல் நடந்து கொண்டார்கள். கேரள அரசு, விசாரணை கமிசன் அமைத்து விசாரிப்பதோடு முருகனின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர் முருகனின் குடும்பத்தார்கள்.

’’மனிதாபிமானமே உன் விலை என்ன.?’’ என்ற கேள்விக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
 
-பரமசிவன்
படங்கள் : ப.இராம்குமார்

சார்ந்த செய்திகள்