Skip to main content

புதையல் ஆசையில் மகனை நரபலி கொடுக்க முயன்ற தந்தை...

Published on 04/08/2020 | Edited on 04/08/2020

 

Image

 

நெல்லை அருகே போலி சாமியாரை நம்பி புதையல் ஆசையில் மகனையே கொல்ல முயன்றுள்ளர் தந்தை.

 

நெல்லை மாவட்டத்தின் களக்காடு அருகேயுள்ள கீழசடையமான் குளத்தின் குமரேசன், கூலி வேலை பார்ப்பவர். மனைவி ராமலட்சுமி. இவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள். தற்போது லாக்டவுண் காலம் என்பதால் வேலை வாய்ப்பில்லாத குமரேசன் எந்நேரமும் போதையிலிருப்பாராம். இவருக்கு அருகிலுள்ள டோனாவூரின் சாமியாரான கிரானராஜனுடன் பழக்கமேற்பட்டுள்ளது. குறிசொல்லி பிழைப்பை நடத்தும் கிரானராஜன் இல்லாததைச் சொல்லி அப்பாவி மக்களை ஏமாற்றிப் பணம் கறக்கும் வித்தையறிந்த போலிச்சாமியாராம்.

 

குமரேசனின் வீட்டுக்கு அடிக்கடி வந்து போன கிரானராஜன், உனது வீட்டில் புதையல் உள்ளது. அதைப் பூதம் பாதுகாத்து வருகிறது. அதற்குப் பூஜை செய்து பலி கொடுத்து சாந்தமாக விரட்டினால் பூதம் போய்விடும். புதையல் கிடைக்கும். அதற்குச் சில பரிகாரங்கள் செய்ய வேண்டும். ஆதலால், பூதத்தை விரட்டி புதையல் எடுக்க 1 லட்சத்து 10 ஆயிரம் செலவாகும் என்று போலிச்சாமியார் சொன்னதைக் கேட்டு வாய்ப்பிளந்து போன குமரேசன் தன் தாய் பார்வதியின் ஒப்புதலோடு பணத்தைக் கடன் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

 

குறிப்பிட்ட நாளான பௌர்னமிக்கு முதல் நாளான நேற்று முன்தினம் குமரேசனின் வீட்டில் பெரிய பள்ளம் தோண்டி பூஜைகள் செய்துவிட்டு ரத்தப்பலி கொடுப்பதற்காக ஒரு சேவலை அறுத்து ரத்தம் தெளித்தவர் பிறகு முக்கியப் பலியாகப் பூனையைப் பலி கொடுக்க முற்பட்ட போது அது தப்பியோடிவிட்டது. பூஜையை நிறுத்திய கிரானராஜன், பூனை ஓடிறுச்சி, அடுத்தவாரம் செவ்வாய்க்கிழமை பலிதரணும். உன் குழந்தைகளில் தலைச்சன் பிள்ளையை நரபலி கொடுக்க வேண்டும். இல்லையேல் குரளி உன் குடும்பத்தின் மீது பாய்ந்துவிடும். அது உங்களுக்கு ஆபத்து என்று சொல்ல, போதையிலிருந்த குமரேசனும் பயத்தில் தலையசைத்து இருக்கிறார்.

 

இவர்களின் நரபலிப் பேச்சைக் கேட்டு அரண்டு போன மனைவி ராமலட்சுமி பதறிப் போய்த் தன் உறவினர் சொர்ணபாண்டியிடம் விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். இது தொடர்பாக அவர் களக்காடு போலீசில் புகார் செய்திருக்கிறார். தொடர்ந்து களக்காடு இன்ஸ்பெக்டர் காளியப்பன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்திப் போலிச் சாமியார் கிரானராஜன், குமரேசன், தாய் பார்வதி மூன்று பேரையும் கைது செய்திருக்கிறார்.

 

கிராமங்களில் என்னதான் விழிப்புணர்வு போதனைகள் நடந்தாலும், ஆடுகள் எப்போதுமே கசாப்புக் கடைக்காரனைத்தானே நம்புகின்றன.

 

 

சார்ந்த செய்திகள்