ரிஷிவந்தியம் அருகே தனது சித்தப்பாவைக் கொலை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே உள்ளது இளையனார் குப்பம். இங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் நேற்று மதியம் 12 மணி அளவில் முகத்தில் ரத்த காயங்களுடன் முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து இதுகுறித்து அவ்வூர் மக்கள் பகண்டை கூட்ரோடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் இளையனார் குப்பம் அரசு நடுநிலைப் பள்ளிக்கு விரைந்து வந்து விசாரணை செய்ததில் இறந்தவர் வடமா மாந்தூரை சேர்ந்த 73 வயது இளைய ராமர் என்பது தெரிய வந்தது.
அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இளைய ராமரின் அண்ணன் மகனான அதே ஊரைச் சேர்ந்த மொட்டையன் மகன் சங்கர் (49) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது போலீசார் விசாரணையில் சங்கர் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். குடும்பத்திற்கு சொந்தமான விளைநிலம் பாகம் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இளைய ராமருக்கும், சங்கருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் இளையனார் குப்பம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்த இளைய ராமரை சங்கர் தனது பைக்கில் அவ்வூர் நடுநிலைப் பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார். தடை உத்தரவு காரணமாக பள்ளிகள் செயல்படாததால் அங்கே யாருமில்லை. இதைப் பயன்படுத்திக்கொண்ட சங்கர் சொத்து பிரச்சனை குறித்து சித்தப்பா இளைய ராமரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சங்கர் அருகில் கிடந்த குச்சியால் இளையராமர் முகத்தில் கடுமையாக தாக்கியுள்ளார், இதனால் இளைய ராமர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். யாருக்கும் தெரியாமல் சங்கர் அங்கிருந்து சென்று விட்டார்.
நடந்த சம்பவத்தை சங்கரே ஒப்புக்கொண்டதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர். சொத்து பிரச்சனையில் தனது சொந்த சித்தப்பாவையே கொலை செய்த அண்ணன் மகனின் கொடூர செயலை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.