பொது இடங்களில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை அகற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கனாருக்கு, மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகம் அருகே சிலை அமைக்கக்கோரி மதுரை மாவட்ட தேவேந்திர குல வேளாளர் உறவின்முறை சங்கத் தலைவர் கே.சி.செல்வகுமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், உச்சநீதிமன்ற உத்தரவை மீறியும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் வைக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா மற்றும் முத்துராமலிங்கத் தேவர் சிலையை அகற்ற உத்தரவிட வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் கோரிக்கையை அரசு நிராகரித்து விட்டதாகவும், ஜெயலலிதாவின் சிலை போக்குவரத்துக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தவில்லை என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், பொது இடங்கள், பூங்காக்கள், சாலைகளில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை அகற்றுவது, மாற்றியமைப்பது, ஒழுங்குபடுத்துவது தொடர்பாக விரிவான கொள்கைகளை வகுக்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் 2010- ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதைச் சுட்டிக்காட்டி, அந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 2- ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.