நேற்று (14.04.2021) சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 130வது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சியினரும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிலையில், மதுரையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினருக்கும் விசிகவினருக்கும் இடையே நேற்று தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பானது.
நேற்று மதுரை தல்லாகுளத்தில் அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திமுக, மதிமுக, விசிக, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என பல்வேறு கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிலையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்த அதிமுகவினரும் பாஜகவினரும் காத்திருந்தனர். அப்பொழுது அங்கு கூடியிருந்த விசிகவினர், பாஜகவினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கக் கூடாது என கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், மதுரை புறநகர் மாவட்ட பாஜக தலைவர் மஹாசுசீந்திரன் தலைமையில் கூடியிருந்த பாஜகவினரை, கைகளில் உள்ள கொடிகளைக் கொண்டு தாக்கினர். பின்னர் அங்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உரிய நேரம் ஒதுக்கப்படும், அப்போது வந்து மரியாதை செலுத்திக்கொள்ளுங்கள் என சமரசம் செய்து அனுப்பிவைத்தனர். இந்த மோதல் சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று நடந்த சம்பவம் தொடர்பாக தற்போது பாஜக மற்றும் விசிகவினர் 60 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசிக பிரமுகர் கதிரவன், பாஜக பிரமுகர் மஹாசுசீந்திரன் உட்பட இரு தரப்பைச் சேர்ந்த 60 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.