Skip to main content

"தி.மு.க. ஆட்சிக்கு வரும் போதெல்லாம்....."- வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.!

Published on 11/02/2022 | Edited on 11/02/2022

 

"Looking at his background ....." - Vanathi Srinivasan MLA!

 

பா.ஜ.க. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கை தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். 

 

பா.ஜ.க.வின் தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான வானதி சீனிவாசன் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், "சென்னை, தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க. மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில், நேற்று (09/02/2022) நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. கோழைத்தனமான இந்த தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வரும் போதெல்லாம், இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் நிகழ்வது வாடிக்கையாகி விட்டது. கடந்த 2007- ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின்போது, தி.மு.க.வினர் ஊர்வலமாக வந்து கமலாலயத்தின் மீது கற்களை, தடிகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

 

இந்நிலையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த ஓராண்டுகூட முடியாத நிலையில் பா.ஜ.க. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. தமிழக காவல் துறையின் பாதுகாப்பில் உள்ள கமலாலயத்தின் மீது தாக்கல் நடத்தப்பட்டிருப்பதையும், அதனைத் தொடர்ந்து காவல்துறை நடந்து கொண்டதையும் பார்க்கும் போது, இது திட்டமிடப்பட்ட சதிச் செயலாகவே தோன்றுகிறது.

"Looking at his background ....." - Vanathi Srinivasan MLA!

நள்ளிரவில் சம்பவம் நிகழ்ந்த உடனேயே, பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தை காவல்துறையினர், தண்ணீரால் கழுவி சுத்தப்படுத்தியுள்ளனர். வீசப்பட்டது பெட்ரோல் நிரப்பிய குண்டா அல்லது ஆசிட் நிரப்பிய குண்டா என்பது தெரியவில்லை. அவசர அவசரமாக தடயங்களை அழிக்க உத்தரவிட்டது யார் என்பதை காவல்துறை விளக்க வேண்டும்.

 

பெட்ரோல் குண்டு வீசியதாக கருக்கா வினோத் என்பவரை காவல் துறை கைது செய்துள்ளது. ஆரம்பகட்ட விசாரணை கூட தொடங்காத நிலையில், நீட் தேர்வை பா.ஜ.க. ஆதரிப்பதால் பெட்ரோல் குண்டு வீசியதாக காவல்துறை மின்னல் வேகத்தில் பத்திரிகைகளுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. கருக்கா வினோத் என்பவர், ஏற்கனவே பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர். கூலிக்காக எதையும் செய்ய தயங்காதவர் எனத் தெரிகிறது. எனவே, அவரது பின்னணியைப் பார்க்கும்போது நீட் தேர்வுக்காக பெட்ரோல் குண்டு வீசினார் என்பதை யாரும் நம்ப மாட்டார்கள்.

 

தமிழகத்தில் பயங்கரவாத சம்பவங்கள் தலையெடுக்க தொடங்கியுள்ளதையே, இந்த சம்பவம் உணர்த்துகிறது. எனவே, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் கோரிக்கையை ஏற்று, கமலாலயத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரணைக்கு மாற்ற வேண்டும். தொடங்கிய நாள் முதலே, மிரட்டல்களையும், பயங்கரவாத தாக்குதல்களையும் எதிர்கொண்டு வரும் கட்சி பா.ஜ.க. எனவே, எதற்கும் அஞ்சாமல், எங்கள் பணியை தொடர்வோம்" என்று குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்