Skip to main content

ஊரடங்கு;  நீட்டிக்கப்படுமா ? தளர்த்தப்படுமா ? 

Published on 04/06/2021 | Edited on 04/06/2021

 

Lockdown; Will it be extended? Will it be relaxed?

 

கரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக இருந்ததைத் தொடர்ந்து பொது முடக்கம், ஜூன் 7-ந் தேதி காலை வரை அமலில் இருக்கும் நிலையில், கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. 

 

இந்த நிலையில், ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படுமா? அல்லது விலக்கிக் கொள்ளப்படுமா? என்கிற கேள்வி ஏழை, நடுத்தர வர்க்கம் மற்றும் தொழில் முனைவோர்களிடம் எதிரொலித்தபடி இருக்கிறது. 

 

இந்தச்சூழலில், இது குறித்து முடிவு செய்வதற்காக அரசின் உயரதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை செயலாளர், முதல்வரின் செயலாளர்கள், மக்கள் நல்வாழ்வுத்துறை உயரதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், பேரிடர் மேலான்மைத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

 

அந்த ஆலோசனைக் கூட்டத்தில், "பொது முடக்கத்தை முழுமையாக அமல் படுத்தியதினால்தான் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மக்களுக்கு பல்வேறு வகையில் இந்த பொது முடக்கம் சிரமத்தை ஏற்படுத்தினாலும், அரசின் அறிவுறுத்தல்களை மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒரு வாரம் பொது முடக்கத்தை நீட்டித்தால் கரோனா பரவல் சங்கிலிகளை முழுமையாக உடைத்து விடலாம்" என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 


அதேசமயம், வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்கள் மற்றும் சிறுகுறு தொழில்களின் பாதிப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டி, ஊரடங்கினை சில தளர்வுகளுடன் மாற்றியமைக்கலாம். அத்தியாவசிய கடைகளை திறப்பது குறித்தும் பரிசீலிக்கலாம் என்ற கருத்தும் அதிகாரிகள் தரப்பிலிருந்து சொல்லப்பட்டிருக்கிறது. இதனால், எந்த முடிவும் உறுதியாக எடுக்கப்படவில்லை.  

 

இது குறித்து அதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது, "குறைந்தபட்சம் 1 வாரமாவது பொது முடக்கத்தை நீட்டிக்க வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். ஆனால், பொதுவெளியிலிருந்து தனக்கு கிடைக்கக் கூடிய தகவல்களினால், மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளை அறிந்து கவலையடைந்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அவரை பொறுத்தவரை, சில தளர்வுகளுடன்  ஊரடங்கை மாற்றியமைக்க வேண்டும், பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளைத் தவிர மற்ற மாவட்டங்களில் ஊரடங்கின் கடுமையைக் குறைக்கலாம் என்றே விரும்புகிறார். ஆனால், மக்கள்நல்வாழ்வுத்துறை அதிகாரிகளின் வலியுறுத்தல்கள் அதற்கு எதிர்மறையாக இருக்கிறது. அதனால்தான் இறுதி முடிவு எட்டப்படவில்லை. இன்று இரவு அல்லது நாளைக்கு முடிவு செய்யப்படும் என தெரிகிறது" என்கிறார்கள்.

 


 

சார்ந்த செய்திகள்