கள்ளக்குறிச்சி மாவட்டம், உலகம் காத்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி பரமேஸ்வரி. இவர்களுக்கு 9 வயதில் கரிஷ்னா எனும் பெண் குழந்தை உட்பட ஏழு மற்றும் இரண்டு வயதில் இரண்டு பெண் குழந்தைகள் என மொத்தம் மூன்று பெண் குழந்தைகள்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு பரமேஸ்வரி, தங்கள் கிராமத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழுவில் குடும்பச் செலவிற்காக கடன் பெற்று அதை மாத தவணையுடன் வட்டியும் சேர்த்து கட்டி வந்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தவணைத் தொகை கட்டுவதற்காக தனது கணவர் சுப்ரமணியிடம் பணம் கேட்டுள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் விரக்தி அடைந்த பரமேஸ்வரி, விவசாய நிலத்திற்கு பயன்படுத்த வைத்திருந்த விஷ மருந்தை எடுத்து தனது மகள் கரிஷ்ணாவிற்கு கொடுத்துவிட்டு அவரும் அதை குடித்துள்ளார். தாயும் மகளும் விஷம் குடித்த தகவலை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து பரமேஸ்வரியின் கணவர் சுப்பிரமணியன் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது சம்பந்தமான வழக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் மூன்றாவது அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணைகள் முடிவடைந்த நிலையில், நேற்று இந்த வழக்கில் நீதிபதி இதான் கீதா ராணி தீர்ப்பளித்தார்.
அவரது தீர்ப்பில், தான் பெற்ற மகளையே விஷம் கொடுத்து உயிரிழக்க காரணமான பரமேஸ்வரிக்கு ஆயுள் தண்டரையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். அபராத தொகைகட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்குமாறு தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.