Skip to main content

பத்து கோடிக்கு போட வேண்டிய ரோட்டை.. ஐம்பது கோடிக்கு போடணுமா! குமுறும் விவசாயிகள்!!

Published on 28/06/2018 | Edited on 28/06/2018

சென்னையிலிருந்து சேலம் வரை அமைய இருக்கும் எட்டு வழி சாலை திட்டத்திற்கு எதிராக மக்கள் போர்க்கொடி தூக்கி வருகிறார்கள். அதுபோல் ஒட்டன்சத்திரத்திலிருந்து திருப்பூர், அவினாசிபாளையம் வரை போடக்கூடிய நான்கு வழிச்சாலை திட்டத்திற்கு எதிராகவும் மக்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். 


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் தொகுதிதான் விவசாய பூமியாக இருக்கிறது. அதுபோல் இப்பகுதிகளில் விளையக்கூடிய காய்கறிகள் தமிழகம் மட்டுமல்ல கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அதனாலயே தமிழகத்திலேயே காய்கறி மார்க்கெட்டில் இரண்டாவது சந்தையாக ஒட்டன்சத்திரம் விளங்கி வருகிறது. இப்படி விவசாய பூமியாக இருந்து வரும் ஒட்டன்சத்திரம் தொகுதியில் தான் நான்கு வழிச்சாலை திட்டமும் தொடங்கி இருக்கிறது.

இதற்காக ஒட்டன்சத்திரத்திலிருந்து தாராபுரம், திருப்பூர் வழியாக அவினாசிபாளையம் வரை எழுபது கி.மீட்டர் தூரத்திற்கு 713.45 கோடி செலவில் இ.பி.எஸ். அரசு நான்கு வழிச்சாலை போடும் பணியை தொடங்கி இருக்கிறார்கள். ஆனால் ஒட்டன்சத்திரத்திலிருந்து தாராபுரம் வரை செல்லும் சாலையில் இருபுறங்களிலும் ஊர்களும், ஊரை ஒட்டியே விவசாய நிலங்களும் தான் பெருமளவில் இருந்து வருவதால் இத்திட்டத்திற்கு மக்களும், விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

அப்படி இருந்தும் கூட நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை இ.பி.எஸ். அரசு இறங்கி வருகிறது. இதில் தங்கச்சியம்மாபளட்டி, காப்பிளியபட்டி உள்பட சில ஊர்களில் உள்ள ரோடே குறுக்கும், நெறுக்குமாக இருப்பதால் அப்பகுதியில் வரக்கூடிய நான்கு வழி சாலையை ஊருக்குள் வராமல் பைபாஸ் மூலமாக போட மக்களே ஆதரவு கொடுத்திருக்கிறார்கள்.

அதுபோல் அதை அடுத்து பெரிய நகரமாக இருக்கக்கூடிய கள்ளிமந்தையம் வழியாக செல்ல இருக்கும் நான்கு வழிச்சாலையை பைபாஸ் மூலம் போடாமல் ஊருக்குள்ளேயே போடச்சொல்லி அப்பகுதி மக்களும், விவசாயிகளும் கூயிறும் கூட பைபாஸ் சாலைதான் அமைப்போம் என விவசாயிகளை மிரட்டி விளைநிலங்களை கையகப்படுத்தும் பணியில் இ.பி.எஸ். அரசு இறங்கி வருவதை கண்டு அப்பகுதி மக்களும் போராட்டத்தில் குதிக்க தயாராகி வருகிறார்கள். 
 

கடந்த 2016ல் இத்திட்டம் தீட்டியபோதே விவசாயிகள் எல்லாம் எதிர்ப்பு தெரிவித்ததுடன் மட்டுமல்லாமல் கோர்ட் வரை போய்விட்டோம். கோர்ட்டும் மக்களின் கருத்துக்களை கேட்டு செயல்பட வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் சேலத்தைச் சேர்ந்த தனி மாவட்ட வருவாய் அதிகாரியான அருமை நாயகம் வரகுணராஜ் மற்றும் ஏடி ராணி தலைமையிலான வந்த அதிகாரிகளிடம் கள்ளிமந்தையம் கருப்பணசாமி கோவிலிலிருந்து அம்மாபட்டி பிரிவு வரை நான்கு கி.மீட்டருக்கு பைபாஸ் சாலை அமைத்தால் விளைநிலங்களான விவசாய நிலங்கள் அழியும் அதனால் கள்ளிமந்தையம் ஊருக்குள்ளேயே மெயின் ரோடு போல் இருக்கும் ரோட்டில் இரண்டு பக்கமும் அரசு புறம்போக்கு நிலம் இருக்கு. அதை அகற்றினாலே நாலு வழிச் சாலைக்கு போதுமானதாக இருக்கும்.

எதற்காக போய் விளைநிலங்களை வீணாக்குகிறீர்கள். அதோடு அந்த பைபாஸ் சாலை அமைப்பதன் மூலம் விளைநிலங்களுக்கு பணம் கொடுத்த ரோடு போட ஐம்பது கோடி வரை செலவாகும் என்கிறீர்கள். ஆனால் ஊர்வழியாக அரைக்கிலோ மீட்டருக்கு ரோட்டை அகலப்படுதுதினாலே அம்மாபட்டி பிரிவு வந்துவிடும்.

இதற்கு பத்து கோடி தான் செலவாகும் என்கிறீர்கள். அப்படி இருக்கும்போது மக்களின் வரிப்பணத்தில் ரூபாய் 50 கோடியை ஏன் வீணாக்குகிறீர்கள் என்று சொல்லியும் கூட செவிடன் காதில் சங்கு ஊதியது போல் கேட்டுவிட்டு இப்ப புறவழிச்சாலை அமைப்போம் என விவசாயிகளை மிரட்டி நிலங்களை கையகப்படுத்தும் பணியில் இறங்கி வருகிறார்கள்.

இதில் ஏதோ உள்நோக்கத்துடன் செயல்படுவது போல் தெரிகிறது. அதனால் இங்குள்ள மக்களை திரட்டி போராட தயாராகி வருகிறோம். இதற்கு ஆதரவாக சர்வ கட்சியினரும் குரல் கொடுக்க இருக்கிறார்கள் என்றார் தமிழக விவசாய சங்கத்தின் மாநில செயலாளரான சத்தியமூர்த்தி

இதுபற்றி  அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி நல்லசாமியிடம் கேட்டபோது.. செம்மண் பூமியான ஐந்து ஏக்கர் நிலத்தை வைத்து முருங்கை, மக்காச்சோளம், பருத்தி போட்டுக்கொண்டு அதை வைத்துதான் வயிற்றை கழுவி வருகிறோம். அதிலயும் இப்ப மண் அள்ளி போடும் அளவிற்கு இரண்டு ஏக்கர் நிலத்தில் பைபாஸ் ரோடு போடுவதற்கு அதிகாரிகள் கேட்டு வருகிறார்கள். ஆனால் எனக்கு கொடுக்க மணமில்லை. அங்கே பாருங்க பருத்தி போடுவதற்காக என் பிள்ளை மாதிரி வளர்த்து வந்த செம்மண் நிலத்தை உழுது தயார் நிலையில் வைத்திருக்கிறேன். அப்படிப்பட்ட நிலம் அழிந்து போக விடமாட்டேன். என் உயிரை கொடுத்தாவது என் பூமியை காப்பாற்றுவேன் என்று கூறினார்.

 

என்னுடைய ஆறு ஏக்கர் நிலத்தில் மாட்டுத் தீவனத்தை போட்டுக்கொண்டு தக்காளி, கத்திரி, மிளகாய் போன்ற காய்கறிகளை போட்டு கண்ணுவலியும் போட்டு வருகிறோம். இப்படி போடக்கூடிய கண்ணுவலி விதை ஜெர்மன், இத்தாலி போன்ற வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைத்து வருகிறார்கள். அந்த அளவுக்கு மருத்துவ குணம் கொண்ட கண்ணுவலியும் இந்த பூமியில் விளைகிறது. அப்படிப்பட்ட  பூமியை நாசமாக்கிவிட்டு ரோடு போட கேட்கிறார்கள். அதிலயும் நீங்க சொல்ற விளைக்கெல்லாம் பணம் கொடுக்க முடியாது. அரசு நிர்ணயம் செய்திருக்கும் பணத்தைத்தான் தருவோம். அப்படி நீங்க வாங்கவில்லை என்றால் கோர்ட்டுக்கு போக வேண்டியதுதான். நாங்கள் எங்களுக்கு தேவையான நிலத்தை எடுத்து ரோட்டுக்கு பயன்படுத்திகொள்வோம் எனக் கூறி எனது மூன்று ஏக்கர் நிலத்தை மார்க் பண்ணிவிட்டு போய்விட்டார்கள். இப்படி என்னைப்போல் நாலு கி.மீட்டருக்கு விளை நிலங்கள் வைத்திருக்கும்  விவசாயிகளை எல்லாம் மிரட்டி நிலங்களை அளந்துவிட்டு போயிருப்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் என்னைப் போல் உள்ள பல விவசாயிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து உழவர் கட்சித்தலைவர் செல்லமுத்துவிடமும் எங்க ஊர் விவசாய சங்கத் தலைவர் சத்யமூர்த்தியிடமும் முறையிட்டு வருகிறோம் என்றார் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி ரங்கசாமி.
 

இதுபற்றி சேலத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறையைச் சேர்ந்த சூப்பிரண்டான அருள்மொழியிடம் செல் மூலம் தொடர்பு கொண்டு கேட்டபோது... கள்ளிமந்தையம் அருகே புறவழிச்சாலை அமைப்பதற்காக டெண்டரெல்லாம் விட்டாச்சுங்க என்றவரிடம், அப்பகுதி மக்கள் ஊருக்குள் சாலை அமைக்க கூறியும் கூட நீங்கள் ஏதோ உள்நோக்கத்தோடு புறவழிச்சாலை அமைக்க டெண்டர் விட்டு இருக்கிறீர்களே என்றதற்கு நீங்க கொஞ்ச நேரம் கழித்து பேசுங்கள். நான் இப்போது பிசியாக இருக்கிறேன் என்று கூறி லைனை கட் செய்துவிட்டார். அதை தொடர்ந்து செல் மூலம் தொடர்பு கொண்டும் கூட லைனில் பிடிக்க முடியவில்லை.


இதுபற்றி நாம் மேலும் விசாரித்த போது... இந்த நான்கு வழி சாலை காண்ட்ராக்டை என்.ஆர். கன்ஸ்ட்ரக்சன் என்ற பெயரில் எடப்பாடியின் மகனின் சகலையான அப்பா ராமலிங்கம் எடுத்திருக்கிறார். ஆனால் ஊர்வழியாக நான்கு வழிச்சாலை அமைத்தால் பத்து கோடிதான் செலவாகும். பணிகளும் சீக்கிரம் முடிந்துவிடும். ஆனால் புறவழிச்சாலை அமைத்தால் ஐம்பது கோடி செலவாகும். விவசாய நிலங்களும், கேணி ஏரிகளும் பெரிதும் பாதிக்கப்படும் என்று அதிகாரிகள் சொல்லியும் கூட எடப்பாடியின் உறவினரோ அப்படியெல்லாம் வேண்டாம். புறவழிச்சாலையே அமைங்க என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறார் என்று தெரிகிறது. இதன்மூலம் விவசாய நிலங்களை அழித்து ஐம்பது கோடி வரை செலவு செய்து  புறவழிச்சாலை அமைப்பதின் மூலம் ஒரு கணிசமான பெரும் தொகையை எடப்பாடி உறவினரான ராமலிங்கம் பார்க்க வேண்டும் என துடித்து வருகிறார். ஆனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகளோ எங்கள் உயிரை கொடுத்தாவது விளைநிலங்களை பாதுகாப்போம் என கூறி வருவதால் கூடிய விரைவில் எட்டுவழி சாலைக்கு மக்கள் போராட்டத்தில் குதித்து வருவது போல் இந்த நான்கு வழி சாலைக்கு எதிராகவும், மக்கள் போராட்ட களத்தில் குதிக்க தயாராகி வருகிறார்கள்!.

 

சார்ந்த செய்திகள்