எல்.இ.டி. தெரு விளக்குகள்-
டெண்டருக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
தமிழகம் முழுவதும் எல்.இ.டி. தெரு விளக்குகள் பொருத்துவதற்கான டெண்டரை ரத்து செய்யக்கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மத்திய அரசின் நிதி உதவியுடன் தமிழகத்தில் 329 கோடி ரூபாய் மதிப்பில் 9 லட்சத்து 6 ஆயிரத்து 310 எல்.இ.டி. தெரு விளக்குகள் பொருத்துவதற்கான திட்டத்தை செயல்படுத்த தமிழக ஊரக வளர்ச்சி துறை சார்பில் டெண்டர் கோரி உள்ளது. இந்த டெண்டர் நிபந்தனைகளில், மாதிரி எல்.இ.டி. விளக்குகள் சென்னை மாநகராட்சி எலக்ட்ரிகல் பிரிவில் பரிசோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தன. ஆனால் தேசிய பரிசோதனை அங்கீகாரம் குழுவின் ஆய்வகங்களில் பரிசோதிக்காமல் மாநகராட்சியால் ஆய்வு செய்வதை எதிர்த்து இந்திய ஊழல் எதிர்ப்பு கூட்டமைப்பின் உறுப்பினர் கார்த்திகேயன் வழக்கு தொடர்ந்தார்.
மேலும், ஏற்கனவே இதுபோன்ற பணிகளுக்கு டெண்டர் எடுத்து 50 சதவீத பணிகளை முடித்த நிறுவனங்கள், அதற்கான சான்றுகளை தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரியிருந்தார். இது பாரபட்சமானது என்பதால் டெண்டரை ரத்து செய்ய கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கடந்த 2014-15 ஆண்டில், தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சாயத்துக்கள் 420 கோடி ரூபாயை மின் கட்டணமாக செலுத்தியுள்ளதாகவும், தெரு விளக்கு பராமரிப்புக்கு 230 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாலும், மின் கட்டணம் மற்றும் பராமரிப்பு செலவுகளை குறைக்க, டியூல்லைட்களுக்கு பதிலாக எல்.இ.டி. பல்புகளை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பல்புகளை சோதிக்க விதிகளுக்கு உட்பட்டுதான் சென்னை மாநகராட்சி எலக்ட்ரிகல் பிரிவு தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கபட்டது.
இவற்றை ஏற்ற நீதிபதிகள், ஒப்பந்த நிபந்தனைகள் தன்னிச்சையானது என்று கூற முடியாது என்றும், குறிப்பிட்ட சிலருக்கி சாதகமாக நிபந்தனைகளை தமிழக அரசு உருவாக்கியுள்ளதாக தெரியவில்லை என கூறி, டெண்டரை ரத்து செய்யக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
- சி.ஜீவா பாரதி