சென்னை நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வந்த டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியை மூட முடிவு செய்துள்ள அரசு இதற்கு பதில் காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சட்டக்கல்லூரிகளை திறக்க உள்ளது. இந்நிலையில் கல்லூரி இடம் மாற்றத்துக்கு, சட்டக்கல்லூரி மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபால், சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த வாரம் முறையிட்டார். அதற்கு தலைமை நீதிபதி, இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறினார்.
இந்த நிலையில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் வழக்குகளை இன்று காலையில் விசாரிக்கத் தொடங்கினார்கள்.
அப்போது, வக்கீல் ஹேம்நாத் ஆஜராகி, ‘சட்டக்கல்லூரி இடம் மாற்றத்தை கண்டித்து சட்டக்கல்லூரி மாணவர்கள் 16-வது நாளாக இன்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் தலையிட வேண்டும். அசம்பாவித சம்பவம் நடப்பதற்கு முன்பாக, மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும். இதுதொடர்பாக வழக்கு தொடர உள்ளேன். அந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும்’ என்று கூறினார்.
அதற்கு தலைமை நீதிபதி, ‘மாணவர்களிடம் போய் போராட்டத்தை கை விட வேண்டும் என உயர்நீதிமன்றம் கூற முடியாது. போராட்டத்தை நடத்தும் அவர்கள்தான், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். இப்போது நீங்கள் வழக்கு தொடர்ந்தால், அந்த வழக்கை அவசர வழக்காகவும் விசாரணைக்கு எடுக்க முடியாது’ என்று கூறினார்.