கிருஷ்ணகிரி அருகே, கடந்த மாதம் 15 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்களை கொள்ளையடித்த சம்பவத்தில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் இருந்து, மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு 15 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்களை ஏற்றிக்கொண்டு கடந்த அக். 21- ஆம் தேதி அதிகாலையில் ஒரு கண்டெய்னர் லாரி கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வழியாக சென்று கொண்டிருந்தது.
மேலுமலை என்ற இடத்தில் லாரி சென்றபோது, மர்ம நபர்கள் லாரியுடன் செல்போன்களை கடத்திச்சென்றனர். பின்னர் லாரியை ஓரிடத்தில் ஒதுக்குப்புறமாக நிறுத்திவிட்டு, அதில் இருந்த செல்போன்களை கொள்ளை அடித்துச்சென்றனர்.
கடும் சவாலாக விளங்கிய இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து துப்புத்துலக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தீவிர விசாரணையில், மத்தியபிரதேச மாநிலம் இண்டூர் பகுதியைச் சேர்ந்த பரத் தேஜ்வானி (37) என்ற முக்கிய குற்றவாளியை தனிப்படையினர் கைது செய்தனர்.
கைதான கொள்ளையனை காவல்துறையினர் நவ.24- ஆம் தேதியன்று கிருஷ்ணகிரிக்கு அழைத்து வந்தனர். ஓசூர் அரசு மருத்துவமனையில் கொள்ளையனுக்கு கரோனா தொற்று பரிசோதனை நடந்தது. இதையடுத்து, அவரை ஓசூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும், பரத் தேஜ்வானியை 13 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமாறு காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி தாமோதரன், 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். இதையடுத்து கொள்ளையனை காவலில் எடுத்த காவல்துறையினர், அவரை ரகசிய இடத்தில் வைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.