கேரளாவிலிருந்து இரவு நேரம் கடத்தி வரப்படும் மருத்துவக் கழிவுகள் நெல்லை மாவட்ட எல்லைப் பகுதிகளில் கொட்டப்படுவது கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை தொடர் சம்பவமாக இருந்தது. பின்னர் அது பெரிய பிரச்சினையாக உருவெடுத்ததால் அவைகள் கண்காணிக்கப்பட்டு கழிவுகளைக் கொண்டு வரும் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்து. நெல்லை மாவட்டப் போலீசின் இந்த நடவடிக்கையால் தற்போது அது மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் அந்தச் சம்பவங்கள் தொடரத் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்கும் அருகே அரசூர் புதுக்கோட்டை பகுதியில் உள்ள முருங்கைத் தோட்டத்தில் கேரளாவிலிருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவக்கழிவுகள் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்ட தகவல் தட்டார்மடம் காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைக்க போலீசார் அந்த இடத்தைப் பார்வையிட்டனர். கேரளாவிலிருந்து கொண்டு வரப்பட்ட மருத்துக்கழிவுகளான ஊசி மருந்துகள் உடைக்கப்பட்ட தடுப்பூசிகள் பிளாஸ்டிக் போன்ற கழிவுகள் மூட்டை மூட்டையாக வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இவை எதற்காகக் கொண்டு வரப்பட்டது. என போலீசார் விசாரித்தனர். ஆனால் யாரும் புகார் தராததால் தகவல் மாவட்ட எஸ்.பி.க்கு அனுப்பியுள்ளனர்.
மேலும் தோட்டத்தில், இந்த மருத்துவக்கழிவுகளை எரித்தும், உடைத்தும் அதிலிருந்த பாகங்களை வேறு பகுதிக்குக் கொண்டு செல்வதால் சுகாதாரச் சீர்கேடு நிலவுவதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே இது குறித்து அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
கேரளாவிலிருந்து மருத்துவக்கழிவுகள் இறைச்சிக் கழிவுகள் தமிழகத்திற்குள் கொண்டு வருவதைத் தடுக்கும் வகையில் கண்காணிப்புத் தீவீரம், சோதனைச் சாவடிகளிலிருந்தும் இவைகள் எப்படிக் கொண்டு வரப்பட்டன என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
இதனிடையே போலீசார் தோட்டத்தில் பார்வையிட்ட பின்பு அந்த கழிவு மூட்டைகள் திடீரென அப்புறப்படுத்தப்பட்டிருக்கிறது.