கன்னியாகுமரி மாவட்டம், செண்பகராமன்புதூரில் உள்ள அவ்வையாா் அம்மன் கோவில் அருகே சானல் கரை ஓரத்தில் சுரேஷ் (வயது 31) என்பவா் நான்கு கோழிப் பண்ணைகளை அமைத்துள்ளார். அதில் கடந்த மூன்று ஆண்டுகளாக பிராய்லர் கோழிகளை வளர்த்து வந்தார். கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டத்தைச் சோ்ந்த வியாபாரிகள் இறைச்சிக்காக கோழிகளை இந்தப் பண்ணையில் வாங்கிச் செல்வது வழக்கம்.
இந்த நிலையில் சுரேஷ் தனது இரண்டு கோழிப் பண்ணைகளைப் பராமரித்து, கோழிகளை விற்பனை செய்வதற்காக நண்பர் சாஜனுக்கு கொடுத்துள்ளார். சாஜனும் அதைக் கவனித்து வந்து, லாபத்தில் குறிப்பிட்டத் தொகையை சுரேஷுக்கு கொடுத்துள்ளார். இந்த நிலையில் சாஜன், சுரேஷின் பண்ணையில் இருந்து கோழித் தீவனங்களைத் திருடி, தான் பாா்த்து வந்த பண்ணையில் உள்ள கோழிகளுக்கு கொடுத்து வந்துள்ளார். இதைப் பலமுறை சுரேஷ் கண்டித்தும் கேட்காமல் திருடி வந்துள்ளார். இதனால் சாஜனிடமிருந்து பண்ணைகளைத் திரும்பப் பெற்று, திட்டுவிளையைச் சோ்ந்த ராஜனிடம் சுரேஷ் கொடுத்துள்ளாா்.
சாஜனுக்கு சுரேஷ் மீது கோபம் இருந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் (19/02/2021) மாலை சுரேஷின் பண்ணைக்கு வந்த சாஜன், அங்கிருந்த ஊழியா்களிடம் தகராறு செய்துள்ளார். மேலும் சுரேஷ் அப்போது அங்கு இல்லாததால், அவருக்கு கொலை மிரட்டல் விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பிப்ரவரி 20-ஆம் தேதி அன்று அதிகாலையில் பண்ணைக்குச் சென்ற சுரேஷ், ராஜனின் பண்ணையில் உள்ள 6 ஆயிரம் கோழிகள் செத்துக் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் பண்ணையின் அருகில் விஷப் பாட்டில் ஒன்று கிடப்பதையும் கண்டறிந்தார்.
இதுகுறித்து ஆரல்வாய்மொழி காவல்நிலையத்தில் ராஜன் புகார் கொடுத்தார். அதையடுத்து, உடனடியாக கோழிப் பண்ணைக்கு சென்ற காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கோழிகள் குடிக்கும் தண்ணீாில் சாஜன் விஷத்தைக் கலந்ததால், அதைக் குடித்த 6 ஆயிரம் கோழிகளும் இறந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக சாஜன் மீது வழக்குப் பதிவுசெய்த காவல்துறையினர், அவரைத் தேடி வருகின்றனர்.
விஷம் கலந்த தண்ணீரைக் குடித்த கோழிகள் இறந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.