கடந்த வருடம், ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு குறித்த வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து, ‘பொதுக்குழு செல்லாது’ என அறிவிக்கக் கோரி ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது. இந்நிலையில் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
எடப்பாடி தரப்பினர் இந்த தீர்ப்பை வரவேற்று கொண்டாடி வரும் நிலையில் ஓபிஎஸ் தரப்பினர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்திருந்தனர். அப்பொழுது பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், ''உச்சநீதிமன்ற தீர்ப்பு என்ற காரணத்தினால் நம்முடைய தரப்பு நியாயங்களை அவர்களுக்கு எடுத்து விளக்க போதுமான அளவு எங்களுக்கு திறமை இல்லையோ என்றுதான் நாங்கள் கருதுகிறோம். எனினும் நியாயம் எங்களிடம் இருக்கிறது. தர்மம் எங்களிடம் இருக்கிறது. நான் கேட்பதெல்லாம் ஒரே கேள்விதான் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உண்டா இல்லையா என்பது. அதற்கு சென்னையில் உள்ள உயர்நீதிமன்றமும் சரி, டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றமும் சரி அதற்கான இறுதியான தீர்ப்பை வழங்காமல் இவர்களும் பொதுக்குழு செல்லும் என்று சொல்கிறார்கள். அவர்களும் பொதுக்குழு செல்லும் என்று சொல்கிறார்கள். இந்த தீர்ப்பு சுற்றி வளைத்து சொல்வதாக இருக்கிறதே தவிர நேரான பதில் இல்லை.எனவே இதனை சுட்டிக்காட்டி வழக்கறிஞர்கள் மீண்டும் நல்ல தீர்ப்பினை பெறுவார்கள் என்று நம்புகிறோம்'' என்றார்.