Skip to main content

நீதிபதி மீது முழு விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!!

Published on 14/06/2021 | Edited on 14/06/2021

 

The judge who committed the crime; Order to file further investigation full report

 

ஏற்கனவே அச்சிட்ட படிவத்தில் விடுபட்ட பகுதிகளைப் பூர்த்திசெய்து உத்தரவு பிறப்பித்த திருவண்ணாமலை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதிக்கு கண்டனம் தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், இதுபோல அவர் எத்தனை உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார் என விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் என்பவர், அதிக வட்டிக்குப் பணம் கடனாக கொடுத்து, தனது சொத்தை அபகரித்துக்கொண்டதாக கூறி, ஆர்த்தி என்பவர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்குப் புகார் அளித்தார். நில அபகரிப்பு தடுப்புப் பிரிவுக்கு அனுப்பப்பட்ட அந்தப் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 

இதனால், ஆர்த்தி தரப்பில் திருவண்ணாமலை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த குற்றவியல் நடுவர் நீதிமன்றம் - 1 (ஜே.எம் -1) நீதிபதி, புகார் குறித்து விசாரிக்கும்படியும், விசாரணையில் குற்றத்துக்கான முகாந்திரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நில அபகரிப்பு தடுப்புப் பிரிவுக்கு உத்தரவிட்டிருந்தார். அதேபோல வழக்கை முடிப்பதாக இருந்தால், அதுகுறித்த அறிக்கையை மனுதாரருக்கு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார். அதன்படி விசாரணை நடத்திய போலீசார், வழக்கை முடித்து, அதுகுறித்த அறிக்கையை மனுதாரருக்கு அனுப்பி வைத்தனர்.

 

இதையடுத்து, தனது புகார் மீது வழக்குப் பதிவுசெய்யக் கோரி ஆர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின்போது, ஆவணங்களைப் பரிசீலித்த நீதிபதி நிர்மல்குமார், திருவண்ணாமலை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் -1 நீதிபதி, ஏற்கனவே அச்சிட்ட படிவத்தில் காலியிடங்களை மட்டும் கையால் பூர்த்திசெய்து உத்தரவு பிறப்பித்ததைக் கவனித்து, அஜாக்கிரதையாகவும் மெத்தனப் போக்குடனும் செயல்பட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தார். பின்னர், இதேபோல எத்தனை உத்தரவுகளை அந்தக் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பிறப்பித்துள்ளார் என விசாரணை நடத்தி, ஜூன் 22ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்படி, திருவண்ணாமலை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 22ஆம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்