Skip to main content

நேர்முக தேர்வுக்கு வருமாறு நீதிபதிக்கு அழைப்பு: தனியார் வேலை வாய்ப்பு நிறுவனங்களில் விசாரணை

Published on 05/10/2017 | Edited on 05/10/2017
நேர்முக தேர்வுக்கு வருமாறு நீதிபதிக்கு அழைப்பு: தனியார் வேலை வாய்ப்பு நிறுவனங்களில் விசாரணை

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் வீடு வில்லிவாக்கத்தில் உள்ளது. இவரது வீட்டு முகவரிக்கு சில நாட்களுக்கு முன்பு சில கடிதங்கள் வந்தன. அவை கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி மற்றும் திருப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சில தனியார் வேலை வாய்ப்பு நிறுவனங்களில் இருந்து வந்தவையாகும்.

கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்களில் காலியாக உள்ள மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கு நேர்முக தேர்வு நடக்க இருப்பதாகவும், அதில் கலந்துகொண்டு பயன்பெறும்படியும் கூறப்பட்டு இருந்தது. இந்த வேலைக்கான மாத ஊதியம் ரூ.20,000 முதல் ரூ.30-ஆயிரம் வரை வழங்கப்படும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்ள, ரூ.750, பதிவுக் கட்டணமாக செலுத்த வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. நீதிபதிக்கு வேலை கொடுப்பதாக கடிதம் அனுப்பிய நிறுவனங்கள் குறித்து தீவிரமாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி டி.ஜி.பி.க்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து சென்னை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நீதிபதி வைத்தியநாதனுக்கு எங்கிருந்து கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன என்பது பற்றிய விவரங்களை வாங்கியுள்ள போலீசார் அந்த நிறுவனங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் உள்ள டைமண்ட் இன்டஸ்ட்ரியல் ரெக்ரூட்மண்ட் நிறுவனம், திருப்பூர் நல்லூரில் இயங்கி வரும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரியல் ரெக்ரூட்மண்ட் நிறுவனம், திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகில் இயங்கி வரும் ரெனால்ட் இன்டஸ்ட்ரியல் ரெக்ரூட்மண்ட், வால்வோ இன்டஸ்ட்ரியல் ரெக்ரூட்மண்ட் மற்றும் திருச்சியில் உள்ள ஏர்-டெக் சொல்யூசன்ஸ் ஆகிய ஐந்து தனியார் வேலை வாய்ப்பு நிறுவனங்களில் இருந்து நீதிபதிக்கு நேர்முகத் தேர்வுக்கான கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது என்பது தெரிந்துள்ளது.

இதைத் தொடர்ந்து கருமத்தம்பட்டியில் உள்ள டைமண்ட் இன்டஸ்ட்ரியல் ரெக்ரூட்மண்ட் நிறுவன உரிமையாளர் வாசுதேவனிடம், கோவை மாவட்ட குற்றப்பிரிவு துணை சூப்பிரண்டு குணசேகரன் விசாரணை நடத்தினார்.

தான் கடந்த 2000-ஆம் ஆண்டில் இருந்து இந் நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், தமிழக அரசின் கீழ் பதிவு பெற்றே நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், இதுவரை ஏராளமானோருக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

‘நீதிபதி வீட்டு முகவரி உங்களுக்கு எப்படி கிடைத்தது...? இதுவரை எத்தனை பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது...? பதிவு கட்டண தொகை நிர்ணயம் செய்வது எப்படி...?’ என 30-க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

     இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ள போலீசார் கூறும்போது, “தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்திவரும் ஆட்கள், தொலைத் தொடர்பு நிறுவனங்கள், காப்பிட்டு நிறவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரி துறைகளில் வேலை செய்யும் சில ஆட்களை வைத்து, அந்த நிறுவனங்களில் இருந்து முகவரி மற்றும் தொடர்பு எண்கள் கொண்ட டேட்டாவை தரவிறக்கம் செய்து, அந்த முகவரிகளுக்கு கடிதம் எழுதி வருகின்றனர்.

அந்த வகையில் யாரோ ஒருவர் தான் தரவிறக்கம் செய்த டேட்டாவை ஐந்து காபிகள் எடுத்து, அதை ஐந்து தனியார் வேலை வாய்ப்பு நிறுவனங்களுக்கு விற்றுள்ளார். இதை வாங்கிய ஐந்து தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்தினருமே நீதிபதி வைத்தியநாதனின் முகவரிக்கு கடிதம் எழுதியுள்ளனர். என தெரித்தனர். மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதிக்குள் முழுமையான அறிக்கையை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும்...” என்று கூறினார்கள்.

சிவசுப்பிரமணியம்

சார்ந்த செய்திகள்