திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் தாலுகா அய்யலூர் அருகே பஞ்சம்தாங்கி பகுதியில் தே.மு.தி.க.வின் மேற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வடிவேலின் இல்ல காதணி விழாவிற்கு வருகை தந்த, தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு பொதுமக்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் ஆரத்தி எடுத்தும், பூரண கும்ப மரியாதை அளித்தும் சிறப்பான வரவேற்பை அளித்தனர். இந்த விழாவில் கலந்துக் கொண்ட பிரேமலதா விஜயகாந்த் குழந்தைகளுக்கு மற்றும் குடும்பத்தினருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரேமலதா விஜயகாந்த், "தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு நிச்சயமாக சாமானிய மக்களை மிகப்பெரிய அளவில் பாதிப்படைய செய்துள்ளது. இந்த விலை உயர்வின் தாக்கம் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையை நிச்சயமாக உயர்த்தும். எனவே மத்திய, மாநில அரசுகள் உடனடியாக விலையை திரும்பப் பெற வேண்டும். இன்றைய காலகட்டங்களில் ஒன்றிய அரசிற்கு பொருளாதார நெருக்கடி இருப்பதால், அந்த சுமையை மக்கள் மீது சுமத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது.
தி.மு.க. தேர்தல் வாக்குறுதியாக தந்த பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். பெண்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட திட்டங்களை முழுமையாக செயல்படுத்த தி.மு.க. அரசு முன்வர வேண்டும் என்று ஒட்டுமொத்த பெண்கள் சார்பாக, தமிழக அரசிடம் கேட்டுக் கொள்கிறேன். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஆணையம், அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தர்ம யுத்தம் நடத்தியவர் ஓ.பி.எஸ். ஆனால் இன்று ஆணையம் அழைத்து அவரிடம் கேட்டபொழுது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இல்லை என கூறியுள்ளார்.
ஆணையத்தை அமைக்க சொன்னதும் அவர் தான், அதற்காக மறுப்பு சொன்னதும் அவர் தான், எனவே, இந்த கேள்வியை என்னிடம் கேட்பதற்கு பதிலாக அண்ணன் ஓ . பன்னீர்செல்வத்திடம் கேளுங்கள், அவர் தெளிவாக பதில்சொல்லுவார்" என்று கூறினார்.