நாமக்கல் அருகே, மர்ம நபர்களின் சட்ட விரோதச் சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில், பணியில் அலட்சியமாகச் செயல்பட்டதாகச் சிறப்பு உதவி ஆய்வாளர் (எஸ்.எஸ்.ஐ), இரண்டு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரை அடுத்த ஜேடர்பாளையம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயியின் மனைவி சத்யா (28 பெயர் மாற்றப்பட்டுள்ளது). பி.காம்., பட்டதாரி. இவரைக் கடந்த மார்ச் 11 ஆம் தேதி, மர்ம நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தனர். அவர் தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்ற இடத்தில் வைத்து இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
சத்யாவை கொலை செய்த வழக்கில், உள்ளூரில் சதாசிவம் என்பவர் நடத்தி வரும் கரும்பாலையில் வேலை செய்து வந்த நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனைக் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த கொலையில் வட மாநிலத் தொழிலாளர்கள் மூவருக்குத் தொடர்பு இருப்பதாகச் சத்யாவின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். இந்த வழக்கை, தற்போது சிபிசிஐடி காவல்துறையினர் மறு விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வீ.கரப்பாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் பல்வேறு அசம்பாவிதங்கள் மர்ம நபர்களால் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, முத்துசாமி என்பவரின் கரும்பாலையில் வேலை செய்து வந்த வட மாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த கொட்டகைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதில் ராகேஷ் (19) என்ற ஒடிஷா மாநில இளைஞர் கொல்லப்பட்டார்.
சிலரின் வீடுகளின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, பள்ளிப் பேருந்துக்கு தீ வைப்பு, விவசாய உபகரணங்களுக்கு தீ வைப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்களும் நடந்தன. இதையடுத்து அங்கு காவல்துறை பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டது. மேற்கு சரக ஐஜி சுதாகர், சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி, சேலம் சரக எஸ்பிக்கள் மற்றும் 800க்கும் மேற்பட்ட காவல்துறையினர் வீ.கரப்பாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் நேரடியாகக் களத்தில் இறங்கி விசாரித்தனர்.
புதிதாக 17 இடங்களில் சோதனைச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டன. அந்த கிராமமே பார்க்காத வகையில் புதிதாகப் பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, மர்ம நபர்களைப் பிடிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. இப்படி காவல்துறை நெருக்கடி முற்றிய நிலையிலும், முருகேசன் என்பவரின் வாழைத் தோட்டத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் 600க்கும் மேற்பட்ட வாழை மரங்களை வெட்டிச் சாய்த்தனர்.
கடந்த மாதம் பரமத்தி வேலூர் அருகே பொத்தனூரைச் சேர்ந்த சவுந்தரராஜன் என்பவருக்குச் சொந்தமான சின்ன மருதூரில் உள்ள பாக்குத் தோப்பில் நுழைந்த மர்ம நபர்கள், அங்கு 1500க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி வீழ்த்தினர். அத்துடன் மர்ம நபர்களின் அட்டகாசங்களுக்குக் காவல்துறையினர் முற்றுப்புள்ளி வைத்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏமாற்றமே மிஞ்சியது.
ஏனெனில், ஜூலை 9 ஆம் தேதி, அதே சவுந்தரராஜன் தோட்டத்திற்குள் மீண்டும் புகுந்த மர்ம நபர்கள் அங்கு எஞ்சியிருந்த மேலும் 1000க்கும் மேற்பட்ட பாக்கு மரங்களை வெட்டி சாய்த்தனர். அத்துடன் அவருக்கு பக்கத்து தோட்டங்களில் இருந்த மரவள்ளிக்கிழங்கு பயிர்களையும் வேரோடு பிடுங்கி நாசப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, காவல்துறை கண்காணிப்புப் பணிகளை மேலும் தீவிரப்படுத்தி இருந்தாலும், இதுவரை மர்ம சம்பவங்களின் பின்னணியில் உள்ள குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில், சின்ன மருதூர் பகுதியில் கண்காணிப்புப் பணிகளில் அலட்சியமாக இருந்ததாகக் காவல்துறை சிறப்பு எஸ்.ஐ., சுப்ரமணி, காவலர்கள் ராமராஜ், ஜனார்த்தனன் ஆகிய மூன்று பேரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்பி ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் நாமக்கல் மாவட்டக் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.