ஈரோடு நஞ்சனாபுரம் பகுதியில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தக் கல்லூரியில் பி.பி.ஏ. மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவ - மாணவிகளைக் கல்விச் சுற்றுலாவுக்காக கர்நாடக மாநிலம் குடகு பகுதிக்கு அழைத்துச் செல்ல கல்லூரி நிர்வாகம் முடிவு செய்திருந்தது. அதன்படி நேற்று நள்ளிரவு 3 ஆசிரியர்கள், 50 மாணவ - மாணவிகள் சுற்றுலா செல்ல புறப்பட்டனர். நேற்று இரவு 11 மணி அளவில் கல்லூரி வளாகத்தில் இருந்து சுற்றுலா பஸ் மாணவ - மாணவிகளை ஏற்றிக்கொண்டு கிளம்பிச் சென்றது.
பேருந்தை சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கோபி என்பவர் ஓட்டி வந்தார். ஈரோடு - பெருந்துறை ரோட்டில் சுமார் 500 மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு வளைவில் பேருந்து வேகமாகத் திரும்பிய போது திடீரென பஸ் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த பஸ்சில் இருந்த மாணவ மாணவிகள் அலறினர். அக்கம் பக்கத்தினர் மற்றும் ரோட்டில் சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக பேருந்து கவிழ்ந்த இடத்துக்கு ஓடிச்சென்று இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த மாணவ - மாணவிகளை மீட்டனர். இந்த விபத்தில் 40க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் காயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் ஈரோடு தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிகிச்சைக்காக ஒரு சில மாணவ - மாணவிகள் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரிக்கும், ஒரு சில மாணவ மாணவிகள் ஈரோடு அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்துக்குள்ளான சுற்றுலா பேருந்து கிரேன் மூலம் மீட்கப்பட்டது.
ஈரோடு அரசு மருத்துவமனைக்கு 10க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகள் சுவேதா(21) பரிதாபமாக உயிர் இழந்தார். அவர் ஈடுபாடுகளில் சிக்கி உயிரிழந்தது தெரிய வந்தது. இறந்த மாணவியின் உடலைப் பார்த்து அவருடன் படிக்கும் மாணவ - மாணவிகள் கதறி அழுதனர்.
விபத்து குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிகிச்சையில் உள்ள மற்ற மாணவ, மாணவிகள் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். விபத்து நடந்ததும் டிரைவர் தப்பி ஓடிவிட்ட நிலையில், அவரைப் பிடிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.