இறுதி யுத்தம் முடிவுக்கு வந்தபோது, சர்வதேச போர்விதிகளுக்கு அமைவாக ஸ்ரீலங்கா இராணுவத்திடம் தமது பெற்றோருடன் சரணடைந்த குழந்தைகள், சிறுவர்களை என்ன செய்தார்கள் என்று அன்று பாதுகாப்பு அமைச்சராக இருந்து யுத்தத்தை வழிநடத்திய தற்போதைய ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச பதிலளிக்க வேண்டும் என்று ஆவணி-30 அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டோர் நாளை முன்னிட்டு மனித உரிமை செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் வலியுறுத்தியுள்ளார். இந்த விஷயம் குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், “ஆகஸ்ட்-30 அனைத்துலக காணமலாக்கப்பட்டோர் தினமாக நினைவு கூறப்படுவது, உலகில் நிகழ்ந்த காணமலாக்கப்பட்டோரின் குமுறல்களுக்கு நீதி அவசியம் என்பதை அனைத்துலக நாடுகளும் உணர வேண்டும் என்ற நோக்கிலேயாகும். எனினும் ஈழத்தமிழர் தங்கள் உறவுகளை முள்ளிவாய்க்கால் மண்ணில் சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் இராணுவ காடையர்களிடம் ஒப்படைத்த சாட்சியங்களுடன் இன்று சிங்கள பேரினவாத அரசாங்கத்தினாலேயே காணமலாக்கப்பட்ட தம் உறவுகளை தேடி நீதி கோரி ஒரு தசாப்தங்களாய் உள்நாட்டிலும் புலத்திலும் போராடி வருகின்றனர்.
எம் உறவுகளை காணாமலாக்கிய சிங்கள பேரினவாத அரசாங்கம், என்றும் நீதியை அளிக்காது என்ற விரக்தியிலேயே சர்வதேசத்திடம் நீதிக்கான கோரிக்கையை முன்வைக்கிறோம். சர்வதேசத்தின் இழுத்தடிப்பு மீளவும் ஈழமக்களை யாருமற்ற அநாதைகளாய் பின்தள்ளுகிறது. ஒரு தசாப்தங்களை கடந்து காணமலாக்கப்பட்ட உறவுகளிற்கான நீதிக்காக போராடும் ஈழத்தமிழர்களை சர்வதேசம் கண்டுகொள்ள தவறுமாயின் சர்வதேச காணமலாக்கப்பட்டோர் தினம் நினைவு கூறப்படுவதன் தார்ப்பரியம் யாதென்ற கேள்வி ஈழத்தமிழர்களிடம் எழுகிறது.
ஈழத்தமிழர்களின் இன்றைய போராட்டங்கள் முள்ளிவாய்க்கால் இனவழிப்பினை மையப்படுத்தி எழுகின்ற போதும், ஈழத்தைப் பொறுத்தவரையில் காணாமலாக்கப்படுதல் என்பது முள்ளிவாய்க்காலிலோ, அதற்கு முந்தைய சில ஆண்டுகளிலோ தொடங்கிய நிகழ்வும் அல்ல. ஈழத்தமிழ் மக்கள் தமது உரிமைகளைக் கோரிப் போராடத் துவங்கிய காலத்தில் இருந்தே காணாமலாக்கப்படுதல் என்பது இன ஒடுக்குமுறையின் ஒரு ஆயுதமாக கையாளப்பட்டு வந்துள்ளது.
1996ஆம் ஆண்டு ஐ.நா அறிக்கையின்படி, 1980-1996 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 11,513பேர் காணாமல் போயிருப்பதாகவும்; 1996ஆம் ஆண்டு ‘ஆசிய மனித உரிமை ஆணையத்தின்’ அறிக்கைப்படி, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் 16,742 என்றும் கூறப்பட்டுள்ளது. எனினும் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாக இருக்கலாம் என்றே இலங்கை மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
இதற்குப் பிந்தைய காலத்தில் இன்றைய இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவின் வெள்ளைவேன் கடத்தல் வாயிலாக மாத்திரம் வடக்கு கிழக்கில் மாத்திரமின்றி தென்னிலங்கையிலும் வசித்த பல ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் காணாமலாக்கப்பட்டுள்ளனர்.
அதாவது முள்ளிவாய்க்காலுக்கு முந்தைய காலத்தில்கூட தமிழ் இளைஞர்களை அடக்கி ஒடுக்கவும் ஆயுதப் போராட்டத்தின்மீது அச்சத்தை ஏற்படுத்தவும் இளைஞர் சக்தியை இல்லாமல் செய்யவும் ஈழத்தில் காணாமலாக்கப்படுதல் என்பது கட்டமைக்கப்பட்ட ரீதியில் சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் இயந்திர நடவடிக்கையாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் இனவழிப்புப் போரின் போது சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் காணாமலாக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் ஒரு இலட்சம் பேரளவில் இறுதிப்போரில் இனவழிப்பு செய்யப்பட்டவர்களாக கருதப்படுகின்றது. இப்போரில் சுமார் ஐம்பதாயிரம் பேர் காணாமலாக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 21ஆயிரம் பேர் சரணடைந்தும் கையளிக்கப்பட்டும் காணாமலாக்கப்பட்டுள்ளனர். முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்டு தமிழ் மக்கள் அழிக்கப்பட்டதைப் போன்றே இன்னொரு போர் உபாயமாக காணாமலாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
ஈழ இறுதிப் போரில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள், சிறுவர்கள் ஸ்ரீலங்கா அரசிடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான குழந்தைகள், சிறுவர்கள் முள்ளிவாய்க்காலில் கொன்றழிக்கப்பட்ட நிலையில் 21ஆயிரம் பேருடன் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள், சிறுவர்கள் சரணடைந்துள்ளனர். இவர்களுக்கும் என்ன நடந்தது என்பதை அன்று பாதுகாப்பு அமைச்சராக இருந்து யுத்தத்தை வழிநடத்திய தற்போதைய ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச கூறவேண்டும்.
இன்று ஊடகங்களை ஆப்கான் சிறுமி ஒருத்தியின் புகைப்படம் ஆக்கிரமித்துள்ளது. ஆப்கானை விட்டு பெல்ஜியத்துக்கு அகதியாய் சென்றுள்ள ஒரு சிறுமி தாம் அகதியாய் செல்கிறோம் என்ற கவலையின்றி மகிழ்ச்சியில் துள்ளி குதித்து செல்கிறார். அவ்வாறே ஈழத்திலும் பல சிறுவர்கள் தந்தை தாயின் சுவடுகளை பின்தொடர்ந்து யாதுமறியாதவகளாய் புது இடம் செல்லும் குதுகலிப்பில் சென்று சிங்கள இராணுவத்திடம் சரணடைந்துள்ளனர். அவ்வாறு சரணடைந்த குழந்தைகள் தொடர்பிலும் கடந்த ஒரு தசாப்த காலங்களில் தீர்வில்லை. சிங்கள பேரினவாத அரசு 59 குழந்தைகளை காணாமலாக்கியதன் மூலம் உலகில் குழந்தைகளை காணாமலாக்குவதில் முதல் தர நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது. குழந்தைகளின் உரிமை தொடர்பிலும் இனவழிப்பு தொடர்பிலும் வரைவிலக்கணங்களை கூறுகின்ற ஐக்கிய நாடுகள் சபையும் இன்ன பிற நிறுவனங்களும் சிங்கள இனவழிப்பு அரசை மயிலிறகால் தடவுவதே உலக மக்களுக்கு வேதனை தருகின்ற விடயமாகும். புகைப்படங்களை பார்த்து மாத்திரம் துயருற்று செல்லும் நிலையிலேயா சர்வதேசம் உள்ளது.
ஈழப் போர் முடிவடைந்து 12 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இன்னமும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் சிங்கள அரசு பொறுப்புக் கூறலை மேற்கொள்ளாதிருக்கின்றது. இந்த நிலையில் உள்ளக விசாரணையை ஐ.நா அவை அறிக்கையில் பரிந்துரை செய்வதன் வாயிலாக காணாமல் ஆக்கிய கோத்தபய அரசையே நீதிபதியாக்கும் வேலையை ஐ.நா மேற்கொள்ளுவது ஏற்புடையதல்ல என்பதுடன் அது பலத்த கண்டனத்திற்கும் விசனத்திற்கும் உரியதாகும்” என்று தெரிவித்துள்ளார்.