அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
2001 முதல் 2006 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபொழுது வருமானத்திற்கு அதிகமாக 2 கோடியே 7 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2008 ஆம் ஆண்டு வழக்கு ஒன்று பதிவு செய்திருந்தது. அந்த வழக்கை எம்பி, எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில் வழக்கானது நிலுவையில் இருக்கிறது.
அதனைத் தொடர்ந்து சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக 2020-ல் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து சட்ட விரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து வருகிறது. சட்டம் அமல்படுத்தப்படுவதற்கு முன்பாகவே தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனவே இது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும், விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அமலாக்கத்துறை தரப்பில், இடைக்காலத்தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதே சமயம் விசாரணையை நடத்தலாம், ஆனால் இறுதி அறிக்கையை மட்டும் தாக்கல் செய்யக்கூடாது என்று மட்டும் உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்க மறுத்த சென்னை நீதிமன்ற நீதிபதிகள், அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத்துறை நடத்தும் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.