குற்றச் சம்பவம் தொடர்பாக பிடிக்கப்பட்டு காவல் நிலையத்தில் போலீஸாரால் விசாரிக்கப்பட்டு வந்த கைதி ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை கோரப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், தாண்டவன்குளம் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரது மகன் சத்தியநாதன் (35). இவர் திருமணமாகாதாகவர். சரித்திரப்பதிவேடு குற்றவாளியான இவர், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அவர் மீது மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாமக்கல் மாவட்டங்களில் பல்வேறு காவல்நிலையங்களில் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவாஜி நகரைச் சேர்ந்த சாமிநாதன் (65) ஆகஸ்ட் 10 அன்று, வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுவிட்டு 12-ம் தேதி காலை வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம் பணம், 6 பவுன் நகைகள் திருடுபோயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரது புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அவ்வீட்டில் தடயவியல் நிபுணர்களால் சேகரிக்கப்பட்ட கொள்ளையர்களின் கைரேகையுடன் சத்தியநாதனின் கைரேகை ஒத்துப்போனது. இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பாக சத்தியநாதன், அவரது கூட்டாளியான சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் ஆகிய இருவரையும் போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனை அருகே சுற்றித்திரிந்த சத்தியநாதனை மேற்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவி வளைத்துப் பிடித்து காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்தார்.
அங்கே நேற்றிரவு அவரை சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகர், டேவிட் தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரித்து வந்தனர். இன்று அதிகாலை 3.30 மணியளவில் அவர் நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அவரை உடனடியாக தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரது நிலைமை மோசமாகவே மேல் சிகிச்சைக்காகத் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சத்தியநாதன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
காவல் நிலையத்தில் போலீஸாரால் விசாரிக்கப்பட்டு வந்த விசாரணை கைதி இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்த சத்தியநாதனுக்கு வனஜா(60) என்ற தாய் மற்றும் இரண்டு சகோதரிகள் உள்ளனர். இவர்கள் சார்பாக சத்தியநாதன் மரணம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.