அண்மையில் ஈரோட்டில் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட முட்டை கருப்பு நிறமாக அழுகிக் காணப்பட்டதாகப் புகார் எழுந்தது. இந்நிலையில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனிடம் செய்தியாளர்கள் இந்தப் புகார் குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் கீதா ஜீவன், ''பாஜக கட்சியிலிருந்து புகார் சொல்லியிருந்தார்கள். அதை நாங்கள் முறைப்படி விசாரித்து, முட்டை விநியோகிப்பவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளோம். கிட்டத்தட்ட 96 முட்டைகள் மாற்றிக் கொடுக்க மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுத்துவிட்டார். அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு திங்கள், புதன், வெள்ளி அல்லது சனிக்கிழமைகளில் உபயோகிக்கப்படும் முட்டைகளுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலர் சீல் வைப்பது வழக்கம். ஏனென்றால் பழைய முட்டையைப் பயன்படுத்தி விடக்கூடாது என்பதற்காகச் சீல் வைக்க வேண்டும் என 2006-ல் இருந்து இந்த உத்தரவு பின்பற்றப்பட்டு வருகிறது. அன்றைய தினம் 'தமிழ்நாடு அரசு' எனக் கருப்பு மையில் முத்திரை வைத்துள்ளார்கள். அந்த நேரத்தில் கனமழை பெய்துள்ளது. தார்ப்பாய் இல்லாமல் முட்டைகளை வண்டியில் ஏற்றிக் கொண்டு வந்துள்ளனர். அதில் நனைந்து கருப்பு மை ஊறி கருப்பு கலர் முட்டையில் இறங்கி உள்ளது'' என்றார்.