பல மாதங்களுக்குப் பிறகு, கடந்த 1 ஆம் தேதி முதல், குறைந்த அளவிலான அரசுப் பேருந்துகள் இயங்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் விபத்துகள் என்ற வேதனையான சம்பவங்களும் நிகழத் தொடங்கியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சிவகிரி பேருந்து நிலையத்தில் இருந்து, வியாழக்கிழமை காலை ஈரோடு நோக்கி அரசு நகரப் பேருந்து (எண்: 42) வந்துகொண்டு இருந்தது. அப்போது லக்காபுரம் என்ற இடத்திற்கு அருகே பேருந்து திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதனையடுத்து பேருந்தை அப்புறப்படுத்தியபோது பேருந்தின் அடிப்பகுதியில் அந்த இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் அதில் பயணித்த நான்கு பேர் பரிதாபமாக இறந்துகிடந்தனர்.
மேலும் பேருந்தில் பயணித்த, மூன்று பயணிகளுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்கள், பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காயமடைந்தவர்கள், அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
காவல்துறை விசாரணையில், விபத்தில் இறந்தவர்கள் மொடக்குறிச்சி அருகே ஆளூத்துப்பாளையம் என்ற கிராமத்திற்கு அருகில் உள்ள பரமசிவபுரம் பகுதியைச் சேர்ந்த மோகம்புரி, அவர் மனைவி மரகதம், அவரது மாமியார் பாவையம்மாள், மரகதத்தின் சகோதரர் பாலசுப்பிரமணி என்று தெரியவந்தது. பேருந்தில் பிரேக் செயல்படாததால் இந்த விபத்து நேரிட்டது எனக் கூறப்படுகிறது.
கரோனா பொதுமுடக்கத்தில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு, பொதுப் போக்குவரத்து தொடங்கப்பட்ட மூன்றாவது நாளிலேயே நடந்தேறிய இந்தப் பேருந்து விபத்து பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் முறைப்படி இடதுபுறம் சாலை ஒரமாகத் தான் வந்துள்ளார்கள். எதிரே வந்த அரசுப் பேருந்து திடீரென வலது புறம் திரும்பும் என யாருக்கும் தெரியாது. ஆனால், அந்தப் பேருந்து சாலையில் செல்ல செல்ல வலதுபுறம் திரும்பியிருக்கிறது. ஒட்டுனரின் கட்டுப்பாட்டை பேருந்து இழந்துவிட்டது. இந்த விபத்து ஏற்படாமல் தவிர்த்திருக்கமுடியும். ஆனால் போக்குவரத்து நிர்வாகம் அதைச் செய்யவில்லை என இதில் மறைக்கப்பட் விஷயத்தை நம்மிடம் கூறினார் அ.தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகி ஒருவர்,
"ஏறக்குறைய ஐந்து மாதங்கள், இடையில் ஒரு மாதம் சில பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டது. பணிமனையில் நீண்ட காலம் நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்துகளின் உறுதித் தன்மையைப் பரிசோதிக்க வேண்டியது நிர்வாகத்தின் கடமை. பிரேக், ஆக்சிலேட்டர், கியர், டயர்களின் கண்டிஷன், இஞ்சின் செயல்பாடு என எல்லாவற்றையும் தொழில்நுட்ப மெக்கானிக் மூலம் பரிசோதனை செய்து, ஒவ்வொரு பேருந்துகளையும் குறிப்பிட்ட தூரம் ஓட வைத்து, எல்லாவற்றையும் முறையாகச் செய்திருந்தால் இப்படி ஒரு கொடூர விபத்து நடந்திருக்காது. ஆனால் எல்லாவற்றையும் செய்ததாக போலிக் கணக்கு காட்டி இந்தக் கரோனா காலத்திலும் போக்குவரத்து நிர்வாக அதிகாரிகள் கொள்ளையடித்து வருகிறார்கள். விபத்துக்குள்ளான பேருந்து ஹேண்டில் வளைவுக்கு அடியில் ஒரு இரும்பு ராடு உடைந்திருக்கிறது. நீண்ட காலம் பயன்படுத்தாமல் இருந்ததால் துருபிடித்து அது உடைந்துள்ளது.
இந்த விபத்து ஒரு அபாய மணியை அடித்துள்ளது என்பதே உண்மை. 7 -ஆம் தேதி முதல் அனைத்து பேருந்துகளும் சாலைகளில் இயங்க உள்ளது. ஒவ்வொரு பேருந்துகளிலும் உள்ள அத்தனை பாகங்களையும் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும். இல்லையேல் இதுபோன்ற விபத்துகள் தவிர்க்க முடியாது" என்றார்.