நேற்று சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி வளாகத்தில் வகுப்பறையில் முன்னாள் பேராசிரியை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இந்த தற்கொலை குறித்து பேராசிரியரின் மொபைல் போனை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா, கரலம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அரிசாந்தி (வயது 32) இவர் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லூரில் 5 வருடங்களுக்கு முன்பு தெலுங்கு பாடம் எடுக்கும் பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார். பின்னர் அவருக்கு அரசு ஆசிரியர் பணி கிடைத்ததை அடுத்து கல்லூரி பேராசிரியர் பணியில் இருந்து விலகி பெரம்பூர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இன்னும் திருமணம் ஆகாத அரிசாந்தி தான் பணியாற்றிய டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் நண்பர்களை பார்க்க அடிக்கடி கல்லூரிக்கு செல்வது வழக்கம். அதேபோல் நேற்று முன்தினம் பள்ளிக்கு விடுமுறை சொல்லிவிட்டு கல்லூரிக்கு சென்ற நிலையில் அவர் பாடம் எடுத்த வகுப்பறையில் தூக்கில் தொங்கியபடி அவர் உடல் நேற்று கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட அவரது உடலில் கையின் மணிக்கட்டு பகுதியில் வெட்டுக்காயம் இருந்தது. இதுகுறித்து அரும்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெளியாட்கள் வந்தால் கல்லூரியின் வாயில் காவலாளியிடம் புகைப்படம் எடுத்து, நுழைவு சீட்டு வழங்கிய பிறகுதான் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். அப்படியிருக்க கண்காணிப்பு கேமராவில் அவர் அனுமதி ஏதும் கேட்காமல் கல்லூரிக்குள் நேராக செல்வது பதிவாகியுள்ளது. அதேபோல் சேலை உடுத்தி இருந்த அரிசாந்தி துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது போலீசாருக்கு இது தற்கொலையா அல்லது கொலையா என்ற சந்தேகத்தை ஏறுபடுத்தியுள்ளது. அவரின் மொபைல் போனில் அவர் யாரை இறுதியாக தொடர்புகொண்டார் என்பதை அடிப்படையாக கொண்டு போலீசார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
ஆனால் இதுவரை இந்த சம்பவத்தின் உண்மை உறுதியாக தெரியவராத நிலையில் அரிசாந்தி அந்த கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர் ஒருவரிடம் பழகி வந்ததாகவும், அவர் கடைசியாக போனில் பேசிய நபரும் அதே பேராசிரியர்தான். அவரை பார்க்கத்தான் கல்லூரிக்கு நேற்று முன்தினம் வந்ததாகவும் கல்லூரி ஊழியர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த பேராசிரியர் கல்லூரி வளாகத்தை விட்டு வெளியே சென்ற நிலையில் முன்னாள் பேராசியரியை அரிசாந்தி கல்லூரி வளாகத்தில் பாடமெடுக்கும் அறைக்குள் இருந்தார் என எங்களுக்கு தெரியாது எனவும் தெரிவித்துள்ளனர்.