சிதம்பரம், காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலக வளாக பகுதியில், கரோனா நேரத்தில் பொதுமக்களைக் கரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் சிறப்பாக பணிபுரியும் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினருக்கு மருந்தாளுனர் சங்கம் சார்பில் ரூ.15 ஆயிரம் மதிப்பிலான நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்பட்டன.
இதனை அச்சங்கத்தின் செயலாளர் வெங்கடசுந்தரம் தலைமையில் சித்தா மருத்துவர் பரணிதரன், மொத்த மருந்துகள் பிரிவு தலைவர் பிரகாஷ் ஆகியோர் சிதம்பரம் காவல் துணை கண்காணிப்பாளர் லால்மேக்கிடம் வழங்கினர். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் (இம்மீனோ 3) மாத்திரைகள் 1000, ஆர்சனிக் ஆல்பம் 100 மாத்திரைகள் ஆகியவை அடங்கிய குப்பிகள் வழங்கப்பட்டன.
இதில், சிதம்பரம் நகரத்தில் பணியாற்றும் அனைத்து காவலர்களும் கலந்துகொண்டு தனிமனித இடைவெளியுடன் நோய் எதிர்ப்பு சக்திக்கான மாத்திரைகளை சிதம்பரம் டிஎஸ்பியிடம் பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில், சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, உதவி ஆய்வாளர் சுரேஷ் முருகன், காவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.