நடப்பாண்டில் நடைபெற்ற குற்ற நிகழ்வுகள் குறித்து மத்திய மண்டல ஐ.ஜி. அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டிருப்பதாவது, “திருச்சி உள்பட 9 மாவட்டங்களில் நடப்பாண்டில் 1,823 பேர் சாலை விபத்தில் பலியாகியுள்ளனர், 523 ரவுடிகள் கைதாகியுள்ளனர். 4 கோடியே 86 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கஞ்சா வழக்கில் 765 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய மண்டலத்தில் உள்ள 9 மாவட்டங்களில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விபத்தில் பலி, போக்சோ பிரிவினர் கைது, கஞ்சா உள்ளிட்டவைகளில் அதிக அளவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, விபத்தில் பலி எண்ணிக்கையில் திருச்சி உள்பட 9 மாவட்டங்களில் கடந்த ஆண்டு 1,573 பேர் பலியாகியுள்ளனர். இந்த ஆண்டு 1,821 பேர் பலியாகியுள்ளனர். அதுபோல் 6,088 பேர் கடந்த ஆண்டு விபத்தில் காயமடைந்த நிலையில், இந்த ஆண்டு 6,199 பேர் காயமடைந்துள்ளனர்.
குண்டர் சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு 500 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த ஆண்டு 523 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போக்சோ பிரிவின் கீழ் கடந்த ஆண்டு 461 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த ஆண்டு 630 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா வழக்கில் கடந்த ஆண்டு 664 பேர் கைது செய்யப்பட்டு 1,065 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த ஆண்டு 765 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 1,460 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மொத்த மதிப்பு 4 கோடியே 86 லட்சம் ரூபாய் ஆகும். இது கடந்த ஆண்டைவிட ஒரு கோடியே 7 லட்சம் ரூபாய் அதிகமாகும்” என தெரிவித்தார்.