ஆர்டர் செய்த 10 நிமிடத்தில் உணவு டெலிவரி செய்யப்படும் என்ற புதிய திட்டத்தை சொமேட்டோ அறிவித்திருந்து. இது தொடர்பாக விளக்கம் கேட்க சென்னை போக்குவரத்து காவல்துறை முடிவெடுத்துள்ளது.
உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான சொமேட்டோ, ஆர்டர் செய்த 10 நிமிடத்தில் உணவு டெலிவரி செய்யும் திட்டம் ஒன்றை அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்திருந்தது. இதற்கு பல்வேறு தரப்புகளிலிருந்து எதிர்ப்புகளும் கிளம்பின. காரணம், 10 நிமிடத்தில் உணவு டெலிவரி செய்யும் நோக்கில் சென்னை போன்ற பெருநகரங்களில் போக்குவரத்து விதிகள் மீறப்படலாம் என்ற அச்சம் நிலவுவதாகவும், இதனால் வாகன விபத்துகள் அதிகம் ஏற்படலாம் என்றும் எதிர்ப்புகள் உருவாகின. இந்நிலையில் சென்னையில் உள்ள சொமேட்டோ நிறுவன அதிகாரிகளிடம் சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் இதுகுறித்து விளக்கம் கேட்கப்பட இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 10 நிமிடத்தில் உணவு டெலிவரி எப்படி சாத்தியம்? என கேள்வி எழுப்பும் காவல்துறை, இதில் போக்குவரத்து விதி மீறப்பட்டால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.