வேலூர் மாவட்டத்தில் வீடுகளுக்கு வழங்கப்படும் 'டொமஸ்டிக்' கேஸ் சிலிண்டர்களை, ஹோட்டல்களிலும் சிறிய உணவு விடுதிகளிலும் பயன்படுத்துகிறார்கள் என்கிற புகார், வருவாய்த்துறையின் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலர்களுக்குச் சென்றது.
அதனைத் தொடர்ந்து, டிசம்பர் 12ஆம் தேதி, வேலூர் மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் திடீரென ரெய்டு நடத்தினர். அதில், மாவட்டம் முழுவதும் சுமார் 32 ஹோட்டல், டீக்கடைகளில் வீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் சிலிண்டர்களைப் பயன்படுத்தியதை கண்டறிந்து, அவைகளைப் பறிமுதல் செய்தனர். அப்படிப் பயன்படுத்திய கடைகள் மீது, வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி, அபராதம் விதிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
வீடுகளுக்கு சப்ளை செய்யப்படும் 14.5 கிலோ அளவுள்ள கேஸ் சிலிண்டரின் விலை தற்போது, 679 ரூபாயாகவும், கடைகளுக்குப் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர்களின் (19 கிலோ) விலை 1,100 ரூபாய் வரை விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர்களுக்கு, அரசு மானியம் வழங்குகிறது. கமர்ஷியல் சிலிண்டர் விற்பனையில் மானியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், கமர்ஷியல் விற்பனையில் உள்ள சிலிண்டர்களைப் பயன்படுத்துவதற்குப் பதில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர்களைப் பயன்படுத்துவதால், அதிகாரிகள் திடீர் ரெய்டு செய்து பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.